டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து மேலூரிலிருந்து பேரணியாக வந்த மக்கள் தமுக்கம் அரங்கத்துக்கு அருகே முக்கிய சாலையில் 2,000க்கும் அதிகமானோர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடம், மதுரை மற்றும் தேனி காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் ஒரு பகுதியினரை காவல்துறையினர் தமுக்கம் பகுதிக்குள் வர விடாமல் தடுத்ததால் அங்கு தள்ளுமுள்ளு - வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.
டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை முழுமையாகக் கைவிட வலியுறுத்தி மேலூர் அருகே இன்று காலை தொடங்கிய விவசாயிகள் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
இன்று காலை பேரணியாகப் புறப்பட்டு பிறகு வாகனங்களில் சென்ற விவசாய அமைப்பினர் மற்றும் கிராம மக்கள் கூட்டம் மதுரை தமுக்கம் அரங்கை அடைந்துள்ளது.
மேலூரில் நூற்றுக்கணக்கானவர்களுடன் பங்கேற்ற இந்தப் பேரணியில், பல்வேறு கிராமங்களிலிருந்து தன்னிச்சையாக ஏராளமான மக்கள் வரத் தொடங்கி அது ஆயிரக்கணக்கானோராக மாறியது.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் பாதிக்கப்படும் அரிட்டாப்பட்டி, வல்லாளபட்டி, நாயக்கர்பட்டி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.
தமுக்கத்தில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் நோக்கி வந்த இந்தப் பேரணி கிட்டத்தட்ட 16 கி.மீ. தொலைவுகளைக் கொண்டிருந்தது. விவசாயி அமைப்பினர் மட்டுமல்லாமல், வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்து, இன்று அப்பகுதிகளில் கடையடைப்புப் போராட்டமும் நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம், வேதாந்தா குழுமத்தைச் சோ்ந்த ஹிந்துஸ்தான் ஸிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
சுரங்கம் தோண்டும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி மற்றும் இதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். அதன் தொடர்ச்சியாக இன்று மதுரையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்துக்கு விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பேரணியாகச் சென்றுள்ளனர்.