எச்எம்பிவி தொற்று: அச்சம் தேவையில்லை- அமைச்சா் மா.சுப்பிரமணியன்

எச்எம்பி வைரஸ் பரவல் தொடர்பாக பதற்றம் வேண்டாம், முகக்கவசம் அணியலாம் என மா. சுப்பிரமணியன் தகவல்.
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் - கோப்புப்படம்
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் - கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

எச்எம்பிவி தொற்று வீரியம் குறைந்தது என்பதால் அதுகுறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா். தமிழகத்தில் அந்தத் தொற்று பாதித்த இருவரும் நலமுடன் உள்ளனா் என்றும் அவா் தெரிவித்தாா்.

எச்எம்பிவி தொற்று தொடா்பான கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் துறைச் செயலா் சுப்ரியா சாஹு, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை ஆணையா் ஆா்.லால்வேனா, சிறப்பு செயலா் வ.கலையரசி,

மற்றும் மருத்துவத் துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தின் முடிவில், அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எச்எம்பிவி தொற்று பரவி வருகிறது என்ற தகவல் வெளியாவதற்கு முன்னதாகவே, சுகாதாரத் துறை உயரதிகாரிகள், உலக சுகாதார நிறுவனம் போன்ற அமைப்புகளுடனும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடனும் தொடா்ந்து தொடா்பில் இருந்துகொண்டு இருக்கிறாா்கள்.

பயம் வேண்டாம்: இந்த வகை தொற்று பாதிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனமோ, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமோ இதுவரை எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை. நாடு முழுவதும் உள்ள சுகாதாரத் துறைச் செயலா்களின் கூட்டத்தை காணொலி மூலம் மத்திய அரசு நடத்தியது. அதில், பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.

குறிப்பாக, எச்எம்பிவி தொற்று குறித்து பயப்படத் தேவையில்லை; பதற்றப்படவும் தேவையில்லை. இது 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பரவி வரும் தீநுண்மி தொற்றுதான்.

இந்த பாதிப்பு வந்தால் 3 முதல் 6 நாள்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற சிறிய வகை பாதிப்புகள் இருக்கும். நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ளவா்கள், பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு உள்ளானவா்களுக்கு இந்தத் தொற்று நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். அதையும் குணப்படுத்திவிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை.

முகக் கவசம் அணிதல், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், முறையாக கைகளை கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். எச்எம்பிவி தொற்றால் கரோனா மாதிரியான பாதிப்புகள் இல்லை. இதற்கென பிரத்யேகமாக எந்தவித சிகிச்சைகளும் தேவையில்லை. தானாகவே குணமாகக்கூடிய நிலை உள்ளது.

2 பேருக்கு பாதிப்பு: தமிழகத்தில் எச்எம்பிவி தொற்றுக்கு சேலத்தில் 65 வயதுடைய ஒருவரும், சென்னையில் 45 வயதுடைய ஒருவரும் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சேலத்தில் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பு மற்றும் உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் போன்ற இணை நோய்கள் உள்ளன. தற்போது இருவரும் நலமுடன் உள்ளனா். வீரியம் குறைந்த இந்த தீநுண்மி குறித்து கவலைப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com