நெல்லை ரூ. 4,000, மதுரை ரூ. 3,800, கோவை ரூ. 3,500: விமானத்தில் அல்ல, ஆம்னி பேருந்தில்...!

சென்னையில் இருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் பலமடங்கு கட்டண உயர்வு...
ஆம்னி பேருந்து கட்டணம்
ஆம்னி பேருந்து கட்டணம்படம்: Redbus website
Published on
Updated on
1 min read

பொங்கல் பண்டிகை விடுமுறையொட்டி, சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது.

பொங்கல் பண்டிகை ஜன. 14 ஆம் தேதி முதல் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜன. 19 வரை 6 நாள்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு ஜன. 11 சனிக்கிழமை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோர் ஆயத்தமாகி வருகின்றனர்.

ரயில்கள், சிறப்பு ரயில்கள், அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு பயணச்சீட்டுகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன. இந்த நிலையில், மக்கள் ஆம்னி பேருந்துகளை நாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் வழக்கமாக விற்பனை செய்யப்படும் தொகையைவிட பலமடக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

அதிக விலைக்கு பயணச்சீட்டு விற்பனை செய்யும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், எதையும் பொருட்படுத்தாமல் வெளிப்படையாக பேருந்து சேவை செயலிகளிலேயே அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ரூ. 4,000 வரையிலும், மதுரைக்கு ரூ. 3,800 வரையிலும், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரூ. 3,500 வரையிலும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

இத்தகைய சூழலில், சென்னை பேருந்து நிலையங்கள் அருகே பண்டிகை காலங்களில் அனுமதியின்றி இயக்கப்படும் திடீர் ஆம்னி பேருந்துகளில் எவ்வளவு விலை சொல்வார்கள் என்று நினைத்தால் மனம் கலக்கம் அடைகிறது.

சென்னையில் இருந்து கோவை, மதுரைக்கு சாதாரண நாள்களில் விமானத்தில் சென்றால்கூட இதைவிட பயணச் செலவு குறைவு என்று சென்னைவாசிகள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

புகார் எண்கள்

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்வது குறித்த புகாா்களை 1800 425 6151 மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம் என்று அரசு போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.