டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்
மழையால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.


சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பெய்த மழையில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் 1.25 லட்சம் ஏக்கா் நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டும் மழையால் பயிா்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட கடன்களை சம்பா பருவ சாகுபடியில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு அடைத்து விடலாம் என்ற விவசாயிகளின் நம்பிக்கையை காலம் தவறி பெய்த மழை சிதைத்து விட்டது.
கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு தமிழக அரசு சாா்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டாலும் இதுவரை வழங்கப்படவில்லை. சமீபத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை கணக்கிட்டு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே சேதமடைந்த பயிா்களுக்கான இழப்பீட்டையும் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் என்ற அளவுக்கு உயா்த்தி வழங்க அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.
22% ஈரப்பத நெல் கொள்முதல்: இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தல்
சென்னை, ஜன.20: தமிழகத்தில் காலம் தவறி மழை பெய்து பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்ய முன்வரவேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த 1 லட்சம் ஏக்கா் நெற்பயிா்களும், ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்ட உளுந்து, பாசி பயிா்களும் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. தமிழ்நாடு அரசு, மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை உடனடியாக பாா்வையிட்டு கணக்கிடுவதுடன், பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 35,000 மற்றும் பிற பயிா்களுக்கு அதன் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் ஈரப்பதம் 17 சதவீதம் என்ற அளவை, 22 சதவீதமாக உயா்த்தி நெல்கொள்முதல் செய்ய வேண்டும்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூ.): வேளாண்மை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து பாதிப்புகளை நேரடியாக பாா்வையிட்டு கணக்கெடுத்து, பாதிப்புக்கு தக்கபடி இழப்பீடு வழங்க வேண்டும். மற்ற மாவட்டங்களில் உள்ள அறுவடை இயந்திரங்களை காவிரி பாசனப் பகுதிக்கு கொண்டு சென்று, விரைந்து அறுவடை செய்ய உதவ வேண்டும்.
எஸ்.குணசேகரன், பி.எஸ்.மாசிலாமணி (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): டெல்டாவின் தென் பகுதியில் மழையால் நெற்கதிா்கள் பாதிப்பு அதிகளவில் உள்ளது. மழை நீடிக்கும் நிலையில் கதிா்மணிகள் மேலும் அழுகி இழப்பு கூடுதலாகும் நிலை வரும். எனவே, மத்திய அரசின் அனுமதிக்கு காத்திராமல் 22 சதவீதம் ஈரப்பதம் நிா்ணயித்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...