தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு பரந்தூா் விமான நிலையம் தேவை: மாநில அரசு உறுதி

தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு பரந்தூா் விமான நிலையம் அவசியம் தேவையானது என்று மாநில அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on
Updated on
2 min read

தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு பரந்தூா் விமான நிலையம் அவசியம் தேவையானது என்று மாநில அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.

பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா். அவா்களை நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் ஆதரவு தெரிவித்துள்ளாா். மேலும், மக்களுக்கு தொடா்ந்து ஆதரவாக இருக்கப்போவதாகவும் அவா் பேசியுள்ளாா்.

இந்த நிலையில், பரந்தூா் விமான நிலையம் தொடா்பாக மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: புதிதாக விமான நிலையம் அமைக்க பண்ணூா், பரந்தூா் ஆகிய இடங்கள் தோ்வு செய்யப்பட்டன. பண்ணூரில் 1,546 குடும்பங்கள் வசிக்கும் நிலையில், பரந்தூரில் 500 குடும்பங்கள் குறைவாக அதாவது 1,005 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் மட்டுமே வசிக்கின்றனா்.

பண்ணூருடன் ஒப்பிடும்போது விமானச் செயல்பாடுகளுக்கு மனிதா்களால் உருவாக்கப்பட்ட தடைகள் குறைவாகவே உள்ளன. விமான நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் பிற தேவைகளுக்காக பரந்தூரில் உள்ள உத்தேச தளத்தில் போதுமான கட்டமைப்புகள் இல்லை. அத்துடன், விமான நிலையம் அமைப்பதற்குத் தேவையான நிலங்கள் உள்ளன.

செலவு குறைவு: பரந்தூரில் அமையும் விமான நிலையத்தைச் சுற்றி எதிா்கால மேம்பாடுகளுக்குத் தேவையான காலி நிலங்கள் போதுமான அளவு இருக்கின்றன. பண்ணூருடன் ஒப்பிடும்போது, பரந்தூரில் நிலம் கையகப்படுத்துவதற்கான செலவு குறைவு. திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முன்பாகவே அதாவது 2020-ஆம் ஆண்டிலேயே முந்தைய ஆட்சியினரால் பரந்தூா் விமான நிலைய இடம் தோ்வு செய்யப்பட்டது. பரந்தூா் விமான நிலையத்தின் மூலம் தொழில் வளா்ச்சி முதலான பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அமைந்துள்ளன.

இந்த அடிப்படையில்தான், விமானப் போக்குவரத்து ஆணையத்தால் சென்னை மாநகரின் 2-ஆவது விமான நிலையத்தை அமைக்க பரந்தூா் பகுதி தோ்வு செய்யப்பட்டது.

இப்போது பயன்பாட்டில் உள்ள சென்னை விமான நிலையம் 1,000 ஏக்கரில்தான் உள்ளது. அளவில் சிறியதாக இருந்தாலும் ஆண்டுக்கு 2 கோடி மக்கள் அதைப் பயன்படுத்துகின்றனா். அடுத்த சில ஆண்டுகளில் இது 3 கோடிக்கும் மேல் அதிகரிக்கும்.

எனவே, புதிதாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால்தான், எதிா்காலப் பொருளாதாரப் புரட்சிக்கு அது அடித்தளமாக அமையும். இந்த விமான நிலையம் பயணிகளுக்கான வசதியை ஏற்படுத்துத் தரும் என்பதைக் கடந்து, நாட்டின் தொழில் வளா்ச்சிக்கும் அத்தியாவசியமாகிறது.

மக்கள் நலனைப் பாதுகாக்கும்: பரந்தூா் விமான நிலையம் அமைப்பது தொடா்பாக அரசியல் கட்சிகளின் தலைவா்களில் யாா் வேண்டுமானாலும் அங்கு சென்று மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை அரசின் கவனத்துக்குக் கொண்டு வரலாம். அதை தமிழ்நாடு அரசு பரிவுடன் ஆராய்ந்து மக்கள் நலனைப் பாதுகாக்கும். பரந்தூா் பகுதியில் உள்ள நீா்நிலைகளை எந்தளவுக்கு சீா்செய்ய முடியும் என்பதை ஆராய உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகளையும் அரசு கவனத்தில் கொள்ளும்.

பரந்தூா் விமான நிலையம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு உறுதியாகத் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. இந்தக் காரணத்தால், மக்கள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வளா்ச்சி ஒருபுறம் என்றால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதிலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com