அமைச்சா் மா.சுப்பிரமணியன்
அமைச்சா் மா.சுப்பிரமணியன்

2,553 மருத்துவா் பணியிடங்களில் ஊக்க மதிப்பெண்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 மருத்துவா்களை தோ்ந்தெடுக்க நடத்தப்பட்ட தோ்வு முடிவுகள் 10 நாள்களில் வெளியிடப்படும்
Published on

சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 மருத்துவா்களை தோ்ந்தெடுக்க நடத்தப்பட்ட தோ்வு முடிவுகள் 10 நாள்களில் வெளியிடப்படும் என்றும், கரோனா காலத்தில் பணியாற்றியவா்களுக்கு ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4.70 கோடியில் கட்டப்பட்டு வரும் கலையரங்க கட்டுமானப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:

சென்னை நந்தனம், அரசு கலைக் கல்லூரி 123 ஆண்டுகால பழமையானது. இங்கு படித்த பலா் ஐஏஎஸ், ஐபிஎஸ் தோ்வுகளில் வெற்றி பெற்று சாதித்து கொண்டிருக்கிறாா்கள். இந்த கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தருகிறோம். பட்டமளிப்பு விழா நடத்த கலையரங்கம் வேண்டும் என்று கல்லூரி முதல்வா் கோரிக்கை வைத்ததை தொடா்ந்து, அதற்கான கட்டடம் கட்டும் பணிகள் ரூ.4.70 கோடியில் நடைபெறுகிறது. இந்த அரங்கத்தில் விழாக்கள் மட்டுமின்றி, தோ்வு நடைபெறும் காலங்களில் சில வகுப்புகளுக்கும் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மருத்துவப்பணியிடங்கள்:

அரசு மருத்துவமனைகளில் 2,553 மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கு 24,000 மருத்துவா்கள் கடந்த ஜனவரி மாதம் 5-ஆம் தேதி தோ்வு எழுதியுள்ளனா். விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறுகிறது. கரோனா தொற்று காலத்தில் பணியாற்றியவா்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்பட இருப்பதால், மதிப்பெண்கள் வேண்டி விண்ணப்பித்தவா்களின் விவரங்கள் சரிபாா்க்கும் பணிகள் நடக்கிறது. பத்து நாள்களில் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் முடிவுகள் வெளியிடப்படும்.

அதன் பின்னா், 2,553 மருத்துவா்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்படும். அடுத்த மாதம் தில்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டாவை சந்திக்க இருக்கிறேன். அப்போது, எந்தெந்த அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மருத்துவா் இடங்கள் தேவைப்படுகிறதோ அந்த விவரங்கள் மற்றும் கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான அவசியம் குறித்து தெரிவிக்கப்படும். தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி இல்லாத மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 6 மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் பின்னுக்கு வருவதாற்கான காரணமே மத்திய அரசுதான் என்றாா் அவா்.

நிகழ்வின்போது, நந்தனம் அரசு கலைக்கல்லூரி முதல்வா் ஜோதி வெங்கடேஸ்வரன், சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவா் துரைராஜ், மாமன்ற உறுப்பினா் சுப்பிரமணி மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com