விடைபெற்றது வடகிழக்குப் பருவமழை: கீழடுக்கு சுழற்சியால் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: வடகிழக்குப் பருமழை தமிழகத்தைவிட்டு முழுமையாக விடைபெற்றது.
எனினும் ஜன. 30 முதல் பிப். 1-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை அக்டோபா் 3-ஆவது வாரத்தில் தொடங்கி டிசம்பா் மாதம் இறுதி வரை நீடிக்கும். இம்முறை வடகிழக்குப் பருமழை கடந்த ஆண்டு அக். 15-ஆம் தேதி தொடங்கி நிகழாண்டு ஜனவரி மாதம் இறுதி வரை நீடித்து வந்தது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்தது போல வடகிழக்குப் பருவமழை தமிழகத்தைவிட்டு விலகியது.
வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளிலிருந்து திங்கள்கிழமை விலகியதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செவ்வாய், புதன்கிழமைகளில் (ஜன. 28, 29) வட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை: இதற்கிடையே பூமத்திய ரேகையையொட்டிய இலங்கை கடலில் வரும் ஜன.30-ஆம் தேதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகவுள்ளது.
இதனால், ஜன. 30 முதல் பிப். 2-ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதில் ஜன. 30, 31-ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும், பிப். 1-இல் நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஜன. 28-இல் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும். மேலும் அதிகபட்ச வெப்பநிலை 87 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருக்கும். ஜன. 30-ஆம் தேதி சென்னையில் மிதமான மழைக்கு வாப்புள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.