விடைபெற்றது வடகிழக்குப் பருவமழை!
சென்னை: வடகிழக்குப் பருவழை தமிழகத்திலிருந்து திங்கள்கிழமை விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2025 அக்டோபா் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து திங்கள்கிழமை (ஜன.19) விலகியது. இதன்காரணமாக, செவ்வாய்க்கிழமை (ஜன.20) முதல் ஜன.25 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
உறைபனி எச்சரிக்கை: நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை(ஜன.20) இரவு அல்லது புதன்கிழமை(ஜன.21) அதிகாலை வேளைகளில் உறைபனி நிலவ வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில், செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளைகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

