
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, 4 மாதங்களுக்கு முன் மாயமான விவசாயியை அவரது சகோதரியின் கணவரே தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்தது, விசாரணையில் தெரியவந்துள்ளதால், இருவரையும் வாழப்பாடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனியன் (46). இவருக்கு செல்வி (37) என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.
கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி வீட்டில் இருந்து, இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று வருவதாகக் கூறி சென்ற முனியன் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், மாயமான தனது கணவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு, அவரது மனைவி செல்வி வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து வாழப்பாடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், முனியனின் சகோதரிகள் ராணி, நீலா ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி வெங்கடாஜலம் என்பவர், தனது நண்பர் சேகர் என்பவருடன் சேர்ந்து முனியனை அடித்து கொலை செய்திருக்கலாம் என, அவரது மனைவி மற்றும் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சில தினங்களுக்கு முன்பு முனியனின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, சந்தேகத்திற்குரிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி, மாயமான விவசாயி முனியனை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வாழப்பாடி காவல் துறையினருக்கு சேலம் போலீஸ் எஸ்.பி., உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இருவரையும் பிடித்த வாழப்பாடி போலீஸார் இரு நாள்களாக விசாரணை நடத்தினர். அப்போது, கொலையுண்ட விவசாயி முனியன், தனது உடன் பிறந்த சகோதரியான நீலாவுடன் நெருங்கி பழகி வந்ததாலும், அவரை கொலை செய்து விட்டால் தனக்கு சொத்து கிடைக்கும் என்பதாலும், வெங்கடாஜலம், தனது நண்பர் சேகருடன் சேர்ந்து முனியனை தனது தோட்டத்திற்கு அருகே அழைத்து அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
கொலை செய்த தடயங்களை மறைக்க, முனியனின் உடலை அத்தனூர்பட்டி மயானத்தின் குப்பையில் மறைத்தவைத்திருந்து, 2 நாள்கள் கழித்து, அங்கு ஒரு உடல் எரியூட்டப்பட்டிருந்த நிலையில், அந்த தீயிலேயே முனியனின் உடலையும் எரித்து விட்டதாகவும், கொலையுண்ட முனியனின் இருசக்கர வாகனத்தை, பயன்படாத விவசாயி கிணற்றில் போட்டுள்ளதாகவும் போலீசாரிடம் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வாழப்பாடி வட்டாட்சியர் ஜெயந்தி முன்னிலையில், பாழடைந்த கிணற்றில் கிடந்த முனியனின் இருசக்கர வாகனத்தை மீட்ட தனிப்படை போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், இன்று (ஜூலை 1) மாலை இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இச்சம்பவம் வாழப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: நிவாரணம் அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.