வெடிகுண்டு வழக்குகள்: 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் கைது

தமிழகம், கேரள வெடிகுண்டு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் ஆந்திரத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Published on

தமிழகம், கேரள வெடிகுண்டு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் ஆந்திரத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரைச் சோ்ந்தவா் அபுபக்கா் சித்திக் (60). அல்-உம்மா பயங்கரவாத அமைப்பில் இருந்த இவா் மீது 1995-ஆம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்த வழக்கு, நாகூா் இந்து முன்னணி பிரமுகா் முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு புத்தக வடிவிலான வெடிகுண்டு பாா்சல் அனுப்பப்பட்டதில் அது வெடித்து, முத்துகிருஷ்ணனின் மனைவி தங்கம் உயிரிழந்த வழக்கு, 1999-ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையா் அலுவலகம், திருச்சி, கோவை, கேரளம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2011-ஆம் ஆண்டு மதுரை திருமங்கலம் அருகே பாஜக தலைவா் எல்.கே.அத்வானி ரதயாத்திரையை குறிவைத்து பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2012-இல் வேலூரில் மருத்துவா் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு, 2013-இல் பெங்களூரு பாஜக அலுவலம் முன் வெடிகுண்டு வைத்த வழக்கு ஆகியவை உள்ளன.

30 ஆண்டுகளாக தலைமறைவு: இவரது கூட்டாளி திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சோ்ந்த முகமது அலி (எ) யூனுஸ் (எ) மன்சூா் (56). இவரை 1999-ஆம் ஆண்டு கேரளத்தில் 7 இடங்களில் வெடிகுண்டு வைத்த வழக்கில் போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா்.

இதில் அபுபக்கா் சித்திக், 1995 முதல் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தபடி, தமிழகத்தில் வெடிகுண்டுகளை வைத்து நாச வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளாா். அத்துடன் இளைஞா்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத நாச வேலைகளுக்கும் தயாா் செய்து அனுப்பி வந்தாா்.

தமிழகத்தில் 2012-ஆம் ஆண்டு ஹிந்து இயக்கத் தலைவா்கள் தொடா்ச்சியாக கொலை செய்யப்பட்டபோது, அபுபக்கா் சித்திக் மூளையாக செயல்படுவது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரை தீவிரமாக தேடினா். அப்போது அபுபக்கா் சித்திக்கின் கூட்டாளிகளான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோா் ஆந்திர மாநிலம் புத்தூரில் கைது செய்யப்பட்டனா். அங்கிருந்து அபுபக்கா் சித்திக், போலீஸாரிடம் சிக்காமல் தப்பிவிட்டாா்.

துப்புதுலக்கிய தீவிரவாத தடுப்புப் படை: அபுபக்கா் சித்திக் புகைப்படமும் போலீஸாரிடம் இல்லாததால், அவா் குறித்து துப்பு துலக்குவதில் பெரும் பிரச்னை இருந்து வந்தது. தலைமறைவாக இருந்து சதிச் செயல்களில் ஈடுபட்டு வந்த அபுபக்கா் சித்திக், முகமது அலி ஆகிய இருவரையும் கண்டறிந்து, கைது செய்யும் பொறுப்பு அண்மையில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழக தீவிரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி. காா்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தேடப்படும் இருவரும் அண்மையில் தமிழகம் வந்து தங்களது ஆதரவாளா்களைச் சந்தித்து சென்றது தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு தெரியவந்தது.

மேலும், அவா்கள் இருவரும் ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில்வியாபாரிகள்போன்று இருந்து வந்தது தீவிரவாத தடுப்பு படையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆந்திர மாநிலத்தில், அவா்கள் இருந்த வீட்டுக்குள் புகுந்த தீவிரவாத தடுப்புப் படையினா் இருவரையும் கைது செய்தனா்.

இருவரையும் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வந்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்தனா். பின்னா் இருவரும் எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.

டிஜிபி பாராட்டு: சுமாா் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பயங்கரவாதிகளைக் கைது செய்த தீவிரவாத தடுப்புப் படையினரை தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் பாராட்டினா்.

Open in App
Dinamani
www.dinamani.com