
சென்னை: மதிமுக கட்சியில் இருந்து யார் சென்றாலும் நெருக்கடி ஏற்படாது, பல காலம் துணை பொதுச் செயலா் மல்லை சத்யா எனக்கு துணையாக இருந்தார். அண்மைக் காலமாக அப்படி இல்லை. மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுகவில், மல்லை சத்யா - துரை வைகோ இடையேயான மோதல் மீண்டும் முற்றியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், மல்லை சத்யாவுக்கு எதிராக பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மதிமுகவில் எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை. பல காலம் மல்லை சத்யா எனக்கு துணையாக இருந்தார். அதனை நான் எத்தனையோ முறை பல இடங்களில் பெருமையாகச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அண்மையில் அப்படி இல்லை. மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சியிலிருந்து யார் வெளியேறினாலும் அதனால் எந்தப் பின்னடைவும் ஏற்படாது. செஞ்சி ராமச்சந்திரன், எல். கணேசன் போன்றவர்கள் கட்சியிலிருந்து வெளியேறியபோதும் கட்சிக்கு எந்தப் பின்னடைவும் ஏற்படாது என்றார்.
தொடர்ந்து செய்தியாளர், மல்லை சத்யா மீதான அதிருப்தியில், திமுக பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து, அவ்வாறு கூற முடியாது. அது உண்மையும் இல்லை என்று வைகோ பதிலளித்துள்ளார்.
ஏற்கனவே மதிமுகவில், முதன்மைச் செயலாளராக இருக்கும் துரை வைகோவுக்கும், துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அதன் உச்சகட்டமாக, மதிமுக முதன்மைச் செயலாளா் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்தார். பிறகு வைகோ உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் தலையிட்டு, இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
அதன்பிறகு, மதிமுக முதன்மைச் செயலாளா் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெறுவதாக துரை வைகோ அறிவித்த நிலையில், துரை வைகோவுடன் இணைந்து செயல்படுவேன் என்றும் துரை வைகோவுக்கு அரணாக இருப்பேன் எனவும் துணை பொதுச் செயலா் மல்லை சத்யா உறுதியளித்திருந்தார்.
ஆனால், இவர்களுக்கு இடையே மோதல் தற்போது முற்றி வருகிறது. மதிமுக பொதுச் செயலர் வைகோவும் தற்போது நடுநிலை வகிக்காமல், மகன் பக்கமாக நின்று பேசி வருவது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.