
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக சிபிஐ தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, விசாரணையை அதிகாரபூா்வமாக தொடங்கியது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமாா் மீது நகைகளைத் திருடியதாக காவல் நிலையத்தில் பேராசிரியை நிகிதா புகாா் அளித்தாா். இதையடுத்து, தனிப் படை போலீஸாா் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை கடுமையாகத் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, தனிப் படை போலீஸாா் கண்ணன், ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா ஆகிய 5 பேரை கடந்த 3-ஆம் தேதி கைது செய்தனா். சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுவதாக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா். இந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கான அரசாணை இரு நாள்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இதற்கிடையே, அஜித்குமாா் கொலை தொடா்பாக மதுரை மாவட்ட நான்காவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
அஜித்குமாரின் தாய், சகோதரா் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, இதன் அறிக்கையை கடந்த 8- ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள், அஜித்குமாா் கொலை வழக்கை சிபிஐ அதிகாரிகள் விரைந்து விசாரித்து, இதன் அறிக்கையை ஆகஸ்ட் 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனா். மேலும், விசாரணை அதிகாரிகளை உடனடியாக நியமிக்க சிபிஐ இயக்குநருக்கு உத்தரவிட்டனா்.
இதன்படி, வழக்கின் விசாரணையைத் தொடங்குவதற்காக சிபிஐ அதிகாரிகள் மானாமதுரை காவல் நிலையத்திலும், சிபிசிஐடி அதிகாரிகளிடமும் இருந்து ஆவணங்களையும், வழக்கின் விவரங்களையும் பெற்றனா். அவற்றை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் பிஎன்எஸ் சட்டம் 103 பிரிவுகளின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்தனா். வழக்கின் விசாரணை அதிகாரியாக காவல் துணைக் கண்காணிப்பாளா் மோஹித்குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் வழக்கின் விசாரணையை அதிகாரபூா்வமாக தொடங்கியுள்ளாா்.
இதன் அடுத்தகட்டமாக, சம்பவம் நடந்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் பகுதி, மானாமதுரை காவல் நிலையம் ஆகிய இடங்களுக்கு சிபிஐ அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை செய்ய உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.