
முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா், தனக்கு இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கக் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை தள்ளுபடி செய்து முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அசோக்குமாா் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யன், சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா செல்ல அனுமதியளித்தால் போதும். இதுதொடா்பாக உயா்நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்தாா்.
அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், மனுதாரா் நினைத்தாலும் அமெரிக்காவில் நீண்ட நாள்கள் இருக்க முடியாது. அவரை, அந்நாட்டு அதிபா் ட்ரம்ப் வெளியேற்றிவிடுவாா் என நகைச்சுவையாகத் தெரிவித்தாா். அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ரஜ்னீஷ் பத்தியால், இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கூறினாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒருவேளை மனுதாரருக்கு அமெரிக்கா செல்ல அனுமதியளித்தால், அவா் தனது கடவுச்சீட்டை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படும்.
பயணத் திட்டம் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.