அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா... இபிஎஸ்ஸை விமர்சித்த ஸ்டாலின்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்.
அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா... இபிஎஸ்ஸை விமர்சித்த ஸ்டாலின்!
Published on
Updated on
2 min read

“அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா” என்று அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 16) மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி, உரையாற்றினார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ”திட்டத்தைப் பற்றி அவதூறுகளைப் பரப்பத் தொடங்கி இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி . அவரே போதும் – இந்தத் திட்டத்தில் எத்தனை சேவை இருக்கிறது – என்னென்ன செய்யப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறார். மொத்தத்தில் விமர்சனம் என்கின்ற பெயரில், நமக்கு விளம்பரத்தை எடப்பாடி பழனிசாமி செய்து கொண்டிருக்கிறார். அதற்காக நன்றி! ஆனால், இந்தத் திட்டத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறார். “தேர்தலுக்கு முன்பே ஊர் ஊராகச் சென்று ஒரு பெட்ஷீட்டை போட்டு, உட்கார்ந்து மனு வாங்கினாரே ஸ்டாலின் அதெல்லாம் என்னானது?” என்று அதிமேதாவி மாதிரி பேசுகிறார். சொல்கிறேன் - பெட்ஷீட் போட்டு வாங்கிய மனுக்களை எக்செல் ஷீட்களாக மாற்றி, ஒர்க் ஷீட்டாக மாற்றி தீர்வு கண்டிருக்கிறோம்.

அது தெரியாமல் நான்கு ஆண்டாகக் குடும்பத்தோடு ஸ்டாலின் இருந்தார் என்று சொல்கிறார். என் குடும்பத்தைப் பொறுத்தவரைக்கும், தமிழ்நாட்டு மக்கள்தான் என்றும் அவர்களோடுதான் இருப்பேன், இருப்பேன், இருக்கிறேன், இருந்தே தீருவேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. உங்களுடைய ஸ்டாலின் பொறுத்தவரைக்கும், உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்திற்காக வீடு, வீடாக செல்கிறோம் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் குடும்பத்திலேயே விசாரித்து பார்க்கட்டும். கட்சி பேதம் பார்க்காமல், தமிழ்நாட்டு மக்களை தன் குடும்பமாக நினைக்கும் ஆட்சிதான், இந்த ஸ்டாலின் ஆட்சி.

மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களும், அ.தி.மு.க. குடும்பங்களைச் சேர்ந்த மகளிருக்கும் சென்றடைகிறது. மறுக்க முடியுமா? அ.தி.மு.க. ஆட்சி செய்த பத்து வருடங்களாக தமிழ்நாட்டு நிர்வாகத்தை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கி வைத்திருந்தார்கள். அதை சரி செய்து ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று அறிவித்தேன். தி.மு.க.வால் ஆயிரம் ரூபாய் தர முடியாது – அந்த ஆட்சி வந்தாலும் தரமுடியாது என்று அப்போதும் சொன்னார் – ஆட்சிக்கு வந்தபிறகும் சொல்கிறார். அவர் அவதூறைப் பரப்பினார்.

நான் சொன்னேன் - சொன்னதைச் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம் என்று நம்முடைய நெஞ்சில் வாழக்கூடிய கலைஞரின் மகன் நான்! அதை உறுதியாக சொன்னோம்; சொன்னபடி கொடுத்து வருகிறோம்.

திராவிட மாடல் அரசின் நான்காண்டு ஆட்சியில், இதுபோல பல திட்டங்களின் பயன்களை என்னால் சொல்ல முடியும். பழனிசாமி தன்னுடைய நான்காண்டு ஆட்சியில் என்ன செய்தார்? இதே மயிலாடுதுறையில், நாம் சிலை அமைத்திருக்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரிலான ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்தை 2018-ஆம் ஆண்டோடு நிறுத்தியவர்தான் பழனிசாமி. மாணவர்களுக்கான லேப் டாப் திட்டத்தை நிறுத்தியவரும் அவர்தான். அவர் எனக்கு டாட்டா - பை-பை சொல்கிறாராம்.

பத்து தோல்வி பழனிசாமி அவர்களே... 2019-ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக உங்களுக்கு டாட்டா - பை-பை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் உங்களுக்கு நிரந்தரமாக குட்பை சொல்லப் போகிறார்கள். இனி மக்கள் ஒருபோதும் உங்களை நம்பப் போவதில்லை. அட… ஏன் உங்கள் கட்சிக்காரர்களே தேர்தல் களத்தில் உங்களை நம்பத் தயாராக இல்லை. ஒரு திரைப்பட காமெடியில் வரும் - “அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா” அதுபோல அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.

இதை தெரிந்துகொண்டு போலியாக ஒரு பிம்பத்தை உருவாக்க ஒரு படத்தின் பெயர் உங்களுக்கு தெரியும் - ‘சுந்தரா டிராவல்ஸ்’ மாதிரி ஒரு பஸ் எடுத்துகொண்டு கிளம்பிவிட்டார். அந்த பஸ்ஸிலிருந்து புகை வருவது மாதிரி இப்போது அவருடைய வாயிலிருந்து பொய்யும் அவதூறுமாக வந்துகொண்டே இருக்கிறது. மக்கள் உங்களை நம்ப தயாராக இல்லை.

விரக்தியில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், தமிழ்நாட்டு மக்களான உங்கள் மீதே குற்றச்சாட்டு வைக்கிறார். உங்களை கொச்சைப்படுத்துகிறார்! என்னவென்றால், ஆயிரம் ரூபாய்க்காக ஏமாந்துவிட்டீர்கள் என்று ஒவ்வொரு கூட்டத்திலும் தாய்மார்களைப் பார்த்து பேசுகிறார்.

மக்கள் ஏமாறவில்லை, பா.ஜ.க.வை நம்பி நீங்கள்தான் ஏமாந்து போயிருக்கிறீர்கள். உங்கள் சுயநலத்திற்காக, உங்கள் குடும்பத்தினரை ரெய்டிலிருந்து காப்பாற்றுவதற்காக

வளர்ச்சியில் முதல் மாநிலம் தமிழ்நாடுதான் என்று உங்கள் ஓனரான மத்திய பா.ஜ.க. அரசே சொல்லும் அளவுக்கு தமிழ்நாட்டை நாங்கள் உயர்த்தி காட்டியிருக்கிறோம்! உறுதியோடு சொல்கிறேன் - அடுத்து அமையப் போவதும் திராவிட மாடல் ஆட்சிதான். திராவிட மாடல் 2.0-வும், இணையற்ற ஆட்சியாக இந்தியாவிலேயே தலைசிறந்த ஆட்சியாகதான் இருக்கும் என்று இப்போதே உறுதி அளிக்கிறேன்.

Summary

Chief Minister Stalin criticized Opposition Leader Edappadi Palaniswami.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com