நீ எதுக்குமே சரிப்பட்டு வரமாட்ட: ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதில்!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் பதிலளித்திருப்பது பற்றி...
Edappadi Palaniswami
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிகோப்புப் படம்
Published on
Updated on
2 min read

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பதிலளித்துள்ளார்.

மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “பத்து தோல்வி பழனிசாமி அவர்களே... 2019-ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக உங்களுக்கு டாட்டா - பை-பை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் உங்களுக்கு நிரந்தரமாக குட்பை சொல்லப் போகிறார்கள். இனி மக்கள் ஒருபோதும் உங்களை நம்பப் போவதில்லை. ஏன் உங்கள் கட்சிக்காரர்களே தேர்தல் களத்தில் உங்களை நம்பத் தயாராக இல்லை. ஒரு திரைப்பட காமெடியில் வரும் - “அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா” அதுபோல அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள்.” என கடுமையாக விமர்சித்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பதிலளித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எங்கு இருந்தாலும், உங்க எண்ணம் முழுக்க என் எழுச்சிப்பயணத்தைச் சுற்றியே தான் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

"உங்களுடன் ஸ்டாலின்" ன்னு ப்ரோமோஷன் பண்ணியிருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள், ஆனால் அம்மாவின் திட்டத்தை காப்பி, பேஸ்ட் செய்துள்ளீர்கள் என்பதை உரக்க சொல்லி இருக்கிறேன், அதுதான் நீங்கள் விரும்பும் விளம்பரமா?

"சொந்தமாக ஒரு திட்டத்தை யோசித்து நிறைவேற்ற வக்கில்லாமல், இப்படி அதிமுக ஆட்சியின் அம்மா திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஓட்டுறீங்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என்று தானே நான் கேட்டேன்? அதற்கு என்ன பதில் சொல்வீங்க?

ஊர் ஊராக கருப்பு பெட்டி தூக்கித் திரிந்து ஏமாற்றியது போதாது என்று, ஒரு துண்டுசீட்டில் 46 பெயர்களை அச்சடித்து யாரை ஏமாற்றுகிறீர்கள்? இந்த 46 சேவைகளையும் நீங்கள் நான்கு ஆண்டுகள் செய்யவே இல்லை என்று அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தானே இது?

பத்து தோல்வி என்று என்னைப் பார்த்து சொல்லும் முன்னர் உங்கள் வரலாற்றைப் பார்த்திருக்க வேண்டாமா?

2011 சட்டமன்ற தேர்தலில், உள்ளாட்சி தேர்தல், 2012 ல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தோல்வி. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் நின்றால் டெபாசிட் கூட தேறாது என்று போட்டியிடாமல் ஓடியது திமுக.

2013 ல் ஏற்காடு இடைத்தேர்தல் தோல்வி. 2014 நாடாளுமன்றத் தேர்தல். ஒரு தொகுதி கூட ஜெயிக்க முடியாமல் மீண்டும் மண்ணைக் கவ்வியது உங்கள் திமுக.

2015 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பக்கமே திமுக வரவில்லை. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி.

2016 சட்டமன்ற தேர்தலை தமிழ்நாடு மறக்குமா? ஒரு ஓட்டை சைக்கிள தூக்கிக் கொண்டு "எடுத்த நாள் முதல், இந்த நாள் வரை, வண்டியை விடவில்லை" ன்னு ஊர் ஊராக ஒட்டிச் சென்று, தமிழ்நாட்டில் ஒரு டீக்கடை விடாமல் டீ குடித்தும், மக்கள் யாரும் உங்களை கண்டுக்கவே இல்ல. அதிமுக ஆட்சி மீண்டும் மலர்ந்தது. நீங்கள் சட்டையைக் கிழித்துக் கொண்டு பேரவையில் இருந்து ஓட்டம் பிடித்தது தான் மிச்சம்.

2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வந்ததே, அதில் கூட மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட படுதோல்வி கட்சி தானே உங்கள் திமுக?

இப்படி ஒரு தேர்தல் வரலாற்றை வைத்துக்கொண்டு, என்னைப் பற்றி மு.க.ஸ்டாலின் பேசலாமா?

இதில் சினிமா வசனம் வேறு, "அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்ட" என்று கூறுகிறார். ஸ்டாலின் அவர்களே, "நீ எதுக்குமே சரிப்பட்டு வரமாட்ட" என்பதைத் தான் மக்கள் சொல்லிட்டு இருக்காங்க.

இந்த திரைப்பட காமெடி ஒன்று வருமே, "யாரோ இவன் மூளைக்குள்ளே போய் இவனை டாக்டர் ன்னு நம்ப வெச்சுட்டாங்க" என்று, அது மாதிரி, யாரோ சிலர் ஸ்டாலின் மூளைக்குள்ளே போய், "இவர் நடத்துவது நல்ல ஆட்சி தான்" என்று நம்ப வைத்துவிட்டார்கள் போல.

அன்பார்ந்த தமிழக மக்களே, நான் எந்தத் தொகுதிக்கு வந்தாலும், நீங்கள் பெருந்திரளாக வந்து, விண்ணைப் பிளக்கும் அளவிற்கு சத்தமாக சொல்லும் அந்த ஒரு சொல், ஸ்டாலின் காதுகளுக்கு நன்றாக கேட்கிறது. நீங்கள் சொல்லும் Bye Bye Stalin அவரை கதற விடுகிறது.” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

Opposition Leader Edappadi K. Palaniswami has responded to Tamil Nadu Chief Minister M.K. Stalin's criticism.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com