
மதுரையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழத்தின் 2-வது மாநில மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழகத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி ஒருபுறமும், அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மறுபுறமும் இருக்க நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் இரண்டு கட்சிகளும் தனித்தனியே களமிறங்கியுள்ளனர்.
மேலும், தவெகவின் முதல்வர் வேட்பாளர் நான்தான் விஜய்யும் அறிவித்துள்ளதால், தேர்தல்களத்தின் தீவிரம் இன்னும் அதிகமாகியுள்ளது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் கடந்தாண்டு அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தற்போது 2-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மாநாட்டுக்கான பூமிபூஜை இன்று (புதன்கிழமை) அதிகாலை நடைபெற்றது. மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், பூமி பூஜையில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி அவர் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் 25 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம். நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.