
மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலரும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் சாலைவலத்தின் போது பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “உங்களுக்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது எங்களது அதிமுக அரசு. உங்களுடைய நிலத்தை யாராலும் தொடமுடியாது.
50 ஆண்டுகால பிரச்சினையான காவிரிப் பிரச்சினையைத் தீர்த்து வைத்ததும் எங்களுடைய அதிமுக அரசுதான். இயற்கை சீற்றமாக புயல், வெள்ளம் வந்தபோது எல்லாம் உங்களை காத்தது அதிமுக அரசுதான்.
மீனவர்களுக்கான திட்டமாக மீன்பிடித் தடைகாலத்தின் போது நிதியை உயர்த்தி வழங்கியதும் அதிமுகதான். கச்சத்தீவை மீட்போம் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், கச்சத்தீவை தாரைவார்த்தது அப்போதைய திமுக தலைவராக இருந்த கருணாநிதிதான். மீனவர்கள் மீதான அக்கறை இல்லாத கட்சி திமுகதான்.
தற்போது கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசியல் செய்வதாக திமுக பொய் கூறி வருகிறது. 16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மீனவர்கள் திமுகவினரின் கண்ணுக்கு தெரியவில்லை. திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது கச்சத்தீவை மீட்டு மீனவர்களை காப்பாற்றியிருக்கலாமே?
மீனவ சமுதாயத்தினரின் வாக்கைப் பெறுவதற்காக தந்திரமாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். மத்திய அரசு மீது பழிபோட்டு, மீனவர்களின் வாக்குகளைப் பெற திமுக முயற்சிக்கிறது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.