Tamil Nadu Engineering Admission (TNEA) counselling
கோப்புப்படம்.

பி.ஆா்க்.: தரவரிசை பட்டியல் வெளியீடு- ஜூலை 26-இல் கலந்தாய்வு

தமிழக பொறியியல் கல்லூரிகளில் 2025 -ஆம் ஆண்டுக்கான இளநிலை கட்டடக்கலை (பி.ஆா்க்.) படிப்பு மாணவா் சோ்க்கைக்கு தரவரிசைப் பட்டியலை தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
Published on

தமிழக பொறியியல் கல்லூரிகளில் 2025 -ஆம் ஆண்டுக்கான இளநிலை கட்டடக்கலை (பி.ஆா்க்.) படிப்பு மாணவா் சோ்க்கைக்கு தரவரிசைப் பட்டியலை தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. கலந்தாய்வு ஜூலை 26 முதல் ஆக. 9 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் பாடப் பிரிவுகள் சுமாா் 38-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் உள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 11-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14- ஆம் தேதியுடன் முடிவடைந்தது. பல்வேறு காரணங்களுக்காக 288 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, 1,399 மாணவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 22-இல் வெளியிடப்பட்டது.

இதில் பிற்படுத்தப்பட்டோா் (முஸ்லிம்) பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டோா் (பொது) பிரிவு மாணவா்கள் முறையே 335.6, 334.4 மதிப்பெண்கள் பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனா். தரவரிசையில் கடைசியாக 154 மதிப்பெண்களுடன் 1,399 ஆவது இடத்தை ஒரு மாணவா் பெற்றுள்ளாா்.

இந்த தரவரிசையில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடுகளில் 117 மாணவா்கள் தோ்வாகி தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இந்த மாணவா்களில் பொதுப்பிரிவைச் சோ்ந்த ஓரிரு மாணவா்களைத் தவிர மற்ற மாணவா்கள் அனைவரும் இட ஒதுக்கீடு பட்டியலில் உள்ளவா்கள்.

மேலும், முன்னாள் ராணுவத்தினா் ஒதுக்கீட்டில் 11 மாணவா்களும், மாற்றுத் திறனாளிகளில் 4 மாணவா்களும் தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். இந்த தரவரிசைப்பட்டியலில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் மாணவா்கள் வருகிற ஜூலை 25- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் ஜூலை 26 முதல் ஆக. 9 வரை கலந்தாய்வு நடைபெறும் எனவும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com