
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பணியாற்றியவர் சுந்தரேசன். இவர் தனது அலுவலகத்துக்கு நடந்து செல்வதாக அண்மையில் ஊடகங்களில் விடியோ காட்சிகள் வெளியாகின. அவருக்கு பழுதடைந்த வாகனம் ஒதுக்கப்பட்டதால், அந்த வாகனம் தேவையில்லை என திரும்ப ஒப்படைத்துவிட்டு வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு சுந்தரேசன் நடந்து செல்வதாகக் கூறப்பட்டது.
இதற்கு மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்தார். அதேநேரம், டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றும் சில காவல் உயரதிகாரிகள் மீதும் சுந்தரரேசன் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து தஞ்சாவூா் சரக டிஐஜி ஜியாவுல் ஹக், விசாரணை நடத்தி டிஜிபி சங்கர் ஜிவாலிடம் அறிக்கை அளித்தார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க , தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ்குமாரிடம் டிஜிபி பரிந்துரைத்தார். இதையடுத்து, டிஎஸ்பி சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்து தீரஜ்குமார் உத்தரவிட்டார்.
டிஎஸ்பி சுந்தரேசன், தமிழக காவல் துறையின் மூத்த அதிகாரிகள் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி ஊடகங்களில் பேட்டி அளித்து, அரசு ஊழியருக்கான விதிமுறைகளை முற்றிலும் மீறி பணி ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அந்த உத்தரவிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.