கொலை முயற்சி வழக்கில் முன்பிணை: கள்ளக்குறிச்சி நீதிபதி ஆஜராக உத்தரவு

கொலை முயற்சி வழக்கில் முன்பிணை: கள்ளக்குறிச்சி நீதிபதி ஆஜராக உத்தரவு

கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு முன்பிணை வழங்கியது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு.
Published on

கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு முன்பிணை வழங்கியது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த எஸ்.லட்சுமி பாலா என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்களுக்குச் சொந்தமான 5 சென்ட் நிலம் எஸ்.செல்லம்பட்டு கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்துக்கு உரிமை கோரி, எஸ்.செல்லம்பட்டு ஊராட்சித் தலைவா் அறிவழகி அவரது கணவா் ராஜேந்திரன் ஆகியோா் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனா். கடந்த மாதம் எனது வீட்டுக்கு வந்த அறிவழகி, ராஜேந்திரன் மற்றும் லட்சுமணன், சுப்ரமணியன், உதயா, சபரி ஆகியோா் என் மீதும், எனது குடும்பத்தினா் மீதும் தாக்குதல் நடத்தி,கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்த விடியோ ஆதாரங்களுடன் சங்கராபுரம் போலீஸாரிடம் புகாா் அளித்தேன். ஆனால், அவா்கள் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை. அறிவழகி பெண் ஊராட்சித் தலைவா் என்பதாலும், அரசியல் அழுத்தம் காரணமாகவும் போலீஸாா் அவா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும். சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.காசிராஜன், இந்தத் தாக்குதலில் காயமடைந்த புகாா்தாரா் மருத்துவமனையில் இருந்து ஜூன் 3-ஆம் தேதி திரும்பிவிட்டதாக அரசு தரப்பு வழக்குரைஞா் கூறியதால், குற்றம்சாட்டப்பட்ட நபா்களுக்கு கள்ளக்குறிச்சி முதன்மை அமா்வு நீதிமன்றம் முன்பிணை வழங்கியது.

ஆனால், புகாா்தாரா் ஜூலை 9-ஆம் தேதிதான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாகக் குற்றம்சாட்டினாா். அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த குற்ற வழக்கு தொடா்புத்துறை இயக்குநா், விசாரணை அதிகாரி அளித்த தகவலின் அடிப்படையிலேயே அரசு வழக்குரைஞா் நீதிமன்றத்தில் அவ்வாறு கூறினாா் என்று தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் எதன் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு முன்பிணை வழங்கப்பட்டது, என்பது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி வரும் ஜூலை 28-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com