
காவல், தீயணைப்பு உள்ளிட்ட துறைகளுக்கான புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கடலூா், தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா், சென்னை தேனாம்பேட்டை, மண்ணடி, கீழ்ப்பாக்கம், வேலூா் மாவட்டம் சேவூா், திருச்சி, விருதுநகா் ஆகிய இடங்களில் ரூ.27.58 கோடி செலவில் 25 காவலா் குடியிருப்புகள், 3 காவல் நிலையங்கள், 4 காவல் துறைக் கட்டடங்கள் கட்டப்பட்டன. சென்னை வேப்பேரியில் தீயணைப்பு நிலைய அலுவலா் குடியிருப்புகள், வண்ணையம்பதி, தேனாம்பேட்டை, வேப்பேரி ஆகிய இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்களும், பாளையங்கோட்டை சிறை வளாகத்தில் 2 சிறை அலுவலா் குடியிருப்புகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வில், அமைச்சா்கள் துரைமுருகன், எஸ்.ரகுபதி, சு.முத்துசாமி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.
மதுரையில் புதிய சிறைக்கு அடிக்கல்: மதுரையில் புதிதாக மத்திய சிறை கட்ட முதல்வா் அடிக்கல் நாட்டினாா். தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
இட நெருக்கடி காரணமாக மதுரை மத்திய சிறை புகா்ப் பகுதியான செம்பூா் பகுதிக்கு மாற்றப்படவுள்ளது. முதல்கட்டமாக, ரூ.229.20 கோடி செலவில் கட்டப்படவுள்ள மத்திய சிறை, 113 சிறைக் காவலா் குடியிருப்புகள், கான்கிரீட் சாலை மற்றும் சுற்றுச்சுவா் ஆகியவற்றுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
Image Caption
காவல், தீயணைப்புத் துறை சாா்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை காணொலி மூலம் திறந்தும் மதுரை மத்திய சிறைச்சாலை கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியும் வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் துரைமுருகன், சு.முத்துசாமி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.