
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று அறிவித்தார்.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் அமைந்துள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்று அவரைச் சந்தித்துப் பேசினார்.
ஆனால், இன்று காலையிலேயே முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சியின்போதே இருவரும் சந்தித்துப் பேசியிருந்தனர்.
இந்த நிலையில், இன்று இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், செய்தியாளர்களுடன் பேசுகையில், முதல்வர் ஸ்டாலினின் உடல்நலன் குறித்து விசாரிக்கவே சந்தித்தேன். மு.க. முத்து-வின் மறைவுகுறித்தும் விசாரித்தேன். அரசியல் நிமித்தமாக எதுவும் பேசவில்லை.
அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை. எதிர்காலத்தில் தேர்தல் நெருங்கும்போது எதுவும் நடக்கலாம். அரசியலில் எனக்கென்று சுயமரியாதை உண்டு. அம்மாவின் (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) நேரடி கண்காணிப்பில் 25 ஆண்டுகள் பணியாற்றியவன் நான்.
மும்மொழிக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்துக்கான நிதியை நிறுத்தி வைத்ததாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தது வருத்தம்தான்.
தேர்தலில் ஒன்றுசேர்ந்த பாஜக - அதிமுகவுக்கு வாழ்த்துகள்; பிரதமர் மோடியுடன் கூட்டணிவைத்த எடப்பாடி பழனிசாமிக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, தவெகவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, கூட்டணி தொடர்பாக தவெகவும் பேசவில்லை, தானும் பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.