
விழுப்புரம்: தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் வந்தது எனக்குத் தெரியாது என்று ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே தொடர்ந்து கட்சி ரீதியாக மோதல் நடைபெற்று வருகிறது.
அன்புமணி ஆதரவாளர்களை கட்சியிலிருந்து ராமதாஸ் நீக்கிய நிலையில், கட்சியின் தலைவராகவே நான்தான் நிர்வாகிகளை நீக்க முடியும் என்று அன்புமணி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து வியாழக்கிழமை காலை தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த அன்புமணி, தனது தந்தை ராமதாஸ், தாய் சரசுவதி அம்மாளை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்புக்கு தனது மகளுடன் அன்புமணி வருகை தந்திருந்த நிலையில், ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இன்று காலை 9.10 மணிக்கு தைலாபுரம் வந்த அன்புமணி, காலை 10 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து தைலாபுரத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இந்த நிலையில், காலை 10.05 மணியளவில் ஆடிட்டர் குருமூர்த்தியும் சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் ஒரே காரில் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தனர்.
தொடர்ந்து மூன்று மணி நேரமாக இவர்கள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பிற்பகல் 1.15 மணிக்கு வெளியே வந்த ஆடிட்டர் குருமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
”பாமக நிறுவனர் ராமதாஸ் எனது நீண்ட கால நண்பர். அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அன்புமணி இங்கு வந்து சென்றது எனக்குத் தெரியாது. பாஜகவுக்காக பேச்சு நடத்த வரவில்லை” என்றார்.
பிரச்னை நடைபெறும் இடத்தில் எல்லாம் நீங்கள் வருகிறீர்களே எனக் கேட்டதற்கு, நான் போகும் இடம் எல்லாம் பிரச்னை வருகிறது என்றார்.
மேலும் ராமதாஸ் - அன்புமணிக்கு இடையேயான பிரச்னை முடிந்து விட்டதா என்ற கேள்விக்கு குருமூர்த்தி பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.