பாஜக கூட்டணியில் இறுதிவரை இருப்பாரா இபிஎஸ்? - அப்பாவு

பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி
Appavu
பேரவைத் தலைவர் அப்பாவுDIN
Published on
Updated on
2 min read

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இறுதிவரை கூட்டணியில் இருப்பாரா என்பதே கேள்விக்குறி என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க வங்கிகளோடு இணைக்கும் திட்டத்தை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று தொடங்கிவைத்தார். நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார், மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள 540 குழுக்களுக்கு 60.02 கோடி ரூபாய் மதிப்பில் கடன் வழங்கப்பட்டது. சுய உதவிக் குழுக்களின் விற்பனை நிலையங்களையும் பேரவைத் தலைவர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அப்பாவு,

"பாஜக ஆட்சியில் மத்திய அரசால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. பொத்தாம்பொதுவாக 10 லட்சம் கோடி தந்தோம், 20 லட்சம் கோடி தந்ததோம் என மத்திய அரசு சொல்கிறதே தவிர, எந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கி உள்ளது என சொல்லமாட்டார்கள்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஆரம்பிப்பதற்கு பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. தமிழகத்திற்கு ரயில்வே திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 701 கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மாநில அரசை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

சென்னையில் இரண்டாவது மெட்ரோ ரயில் திட்டத்தை உள்துறை அமைச்சர் நேரடியாக வந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போது ஆரம்பித்தார்கள். அந்தத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை. எந்தவிதமான நிதியும் இதுவரை கொடுக்கவில்லை. ஆனால் 63,000 கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளதாக பாஜக பொய் சொல்கிறது. மத்திய அரசின் திட்டத்திற்கு 7,000 கோடி மட்டுமே நிதி கொடுத்துள்ளது. மாநில அரசு 26,000 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. மீதி பணம் கடனாக பெறப்பட்டுள்ளது. கடனை திரும்ப செலுத்துவதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதற்கு முழு பொறுப்பு தமிழக அரசுதான் என ஒப்பந்தம் போட்டுள்ளது. 7,000 கோடி ரூபாயை கொடுத்துவிட்டு 63 ஆயிரம் கோடி கொடுத்ததாகச் சொன்னால் என்ன நியாயம் உள்ளது? மத்திய அரசு தரவேண்டிய நிதியை நான்காண்டுகளாக தரவில்லை.

கல்வித் துறைக்குத் தரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை. மாநில அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தியாவில் உள்ளவர்கள் இந்தியர்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என செல்கிறது. இந்த நாட்டிற்கு அரசியலமைப்புச் சட்டம் என ஒன்று உள்ளது. அதன்படிதான் வாழ வேண்டும்.

மத்திய பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் அரசியலமைப்புச் சட்டத்தை குப்பையில் தூக்கிபோட்டு விட்டார்கள். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். அதனைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.

எல்லோரும் கல்வி கற்கலாம் என்பதே பிரிட்டிஷ் கல்வி கொள்கை. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்தான் நமது கலாசாரத்தை அழித்துவிட்டார்கள் என ஆளுநர் சொல்கிறார். ஆர்எஸ்எஸ் கலாசாரம் என்பது உயர் ஜாதியினர் மட்டுமே படிக்கலாம், மற்ற ஜாதியினர் படிக்கக்கூடாது என்பது. அந்த சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துவதுதான் புதிய கல்விக் கொள்கை. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக கொதித்தெழுந்தது தமிழகம் மட்டும்தான். ஒருபோதும் புதிய கல்விக் கொள்கையை அனுமதிக்கமாட்டேன் என முதலமைச்சர் சொல்கிறார். புதிய கல்விக் கொள்கை என்பது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் சனாதன தர்மம்.

தமிழகம் முழுவதும் மீண்டும் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க வேண்டும் என அனைத்து கிராமத்தில் உள்ள பெண்களும் நினைக்கிறார்கள். 234 சட்டமன்ற தொகுதியிலும் தமிழக முதலமைச்சர் சொல்லும் வேட்பாளருக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். பாஜகவுடன் தற்போது வந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடைசி வரை அவருடன் இருப்பாரா என்பதே கேள்விகுறி. அவர் வேறு முடிவு எடுத்துவிட்டார். என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களே அதனை சொல்கிறார்கள்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை முன்னாள் வைத்துக் கொண்டுதான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வரப்போகிறது என்பதை அமித்ஷா சொன்னார். எடப்பாடி பழனிசாமியை தில்லியில் அழைத்தும் அதையேதான் சொன்னார். எதிர்க்கட்சித் தலைவர் சுயமாக சிந்திக்கக் கூடியவர். அவர் நல்ல முடிவை எடுப்பார். பாஜகவிடம் ஒரு முடிவு தெளிவாக இருக்காது. எதைக் கேட்டாலும் தில்லியில் முடிவு செய்வார்கள் என்றுதான் சொல்லிவிடுவார்கள்" எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com