
சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே 6 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பெரம்பூர் நெடுஞ்சாலைப் பகுதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) திடீரென சுமார் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
உடனடியாக அப்பகுதி மக்கள் பெரம்பூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலை மணி மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் செம்பியம் போக்குவரத்து ஆய்வாளர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாத அளவிற்கு தடுப்புகள் வைத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.
மேலும், 6 அடி ஆழத்திற்கு கீழ் மெட்ரோ குடிநீர் ராட்சத குழாய்கள் செல்வதால் உடனடியாக இதுகுறித்து குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பெயரில் மண்டலம் 6 குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஊழியர்கள், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
பள்ளம் ஏற்பட்ட பகுதியிலிருந்து சுமார் 50 அடி தூரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.