தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ச்சியில்லை என அமைச்சர் கூறியதற்கு முதல்வரின் பதில் என்ன? - அன்புமணி

தமிழ்நாட்டில் தொழில்துறை தொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கருத்து பற்றி அன்புமணி கேள்வி.
PMK leader Anbumani Ramadoss
அன்புமணி ராமதாஸ் ENS
Published on
Updated on
1 min read

ஆந்திரம், கர்நாடகம் அளவுக்கு தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியடையவில்லை என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியதற்கு முதல்வரின் பதில் என்ன? என
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

தொழில்துறை வளர்ச்சியில் ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா போன்ற  பிற தென் மாநிலங்கள் அளவுக்கு தமிழ்நாடு தீவிரம் காட்டவில்லை என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் தொழில்துறையின் வளர்ச்சி பிற தென் மாநிலங்களைவிட குறைவாக இருப்பதாக அமைச்சர் ஒருவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மதுரையில் நேற்று நடைபெற்ற புதுமதுரை 2035 என்ற தொலைநோக்குத் திட்டத்தின் ஆவணம், இலட்சினை ஆகியவற்றை வெளியிடுவதற்கான நிகழ்ச்சியில் பேசும்போது இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்  எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர், அண்மையில் சட்டப்பேரவையில் பேசும்போது, டைடல் பூங்காக்களை அமைப்பது குறித்து அறிவிக்கும் அதிகாரம் தமக்கு அளிக்கப்படவில்லை என்று கூறினார். தமிழகத்தில் 50% மது பாட்டில்கள் வரி செலுத்தப்படாமல் விற்பனை செய்யப்படுவதாக வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார்.

நிதித்துறை அமைச்சராக இருந்தபோது ஒரு தொலைபேசி உரையாடலில், 'உதயநிதியும், சபரீசனும் ரூ. 30 ஆயிரம் கோடி சேர்த்து விட்டனர்' என்று கூறியதாக சர்ச்சைகள் வெடித்தன. எனவே, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்த அமைச்சரின் பேச்சை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியடையவில்லை; தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றன என்று பாமக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில்தான் அமைச்சரின் பேச்சு அமைந்திருக்கிறது. அமைச்சரின் இந்த பேச்சு குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com