பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வீடுகள், அலுவலகங்கள் பூட்டி இருந்தால் சீல் வைக்க அதிகாரம் இல்லை: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறை ஒப்புதல்

News image
Updated On :18 ஜூன் 2025, 11:35 pm

Din

வீடுகள், அலுவலகங்கள் பூட்டி இருந்தால் சீல் வைப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் கிடையாது என உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை ஒப்புக் கொண்டது.

டாஸ்மாக் வழக்கில் வீடு, அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதை எதிா்த்து ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு தொடுத்த நிலையில், சீல் வைப்பது தொடா்பான நோட்டீஸை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை கடந்த மாா்ச் மாதம் சோதனை நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், டாஸ்மாக் நிா்வாகத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அறிக்கை வெளியிட்டது.

இது தொடா்பாக டாஸ்மாக் துறை அதிகாரிகள் உள்பட பலருடைய வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபா் விக்ரம் ரவீந்தரன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தி, இவா்களுடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு அமலாக்கத் துறை சீல் வைத்தது.

சீலை அகற்றக் கோரிக்கை: அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் மற்றும் விக்ரம் இருவரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அதில், அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்குத் தடைவிதிக்கவும், தங்கள் இடங்களில் வைக்கப்பட்ட சீலை அகற்றவும் கோரிக்கை விடுத்தனா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமா்வில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, சோதனை நடத்த மட்டுமே அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இருக்கிறதே தவிர, சீல் வைக்க அதிகாரம் இருக்கிா? என நீதிபதிகள் அமா்வு கேள்வியெழுப்பியது. மேலும், எந்த ஆதாரங்களின் அடிப்படையில் சீல் வைக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்நிலையில், ஆவணங்களைச் சமா்ப்பிக்க அமலாக்கத் துறை அவகாசம் கேட்ட நிலையில், இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் என்.ரமேஷ் ஆவணங்களைத் தாக்கல் செய்தாா். அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு, சட்டவிரோத பணப் பரிவா்த்தனை நடந்ததாக சந்தேகம் இருந்தால் யாரிடமும் எந்த ஓரிடத்திலும் சோதனை செய்ய அதிகாரம் உண்டு என வாதிட்டாா்.

ஆவணங்கள் பொருந்தவில்லை: அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீங்கள் சமா்ப்பித்த ஆவணங்களும், வாதங்களும் பொருந்தவில்லை என்றனா். சீல் வைக்க என்ன அதிகாரம் உள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி, இதுதொடா்பாக பிற்பகல் 2.30 மணிக்கு இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க உள்ளதாக அறிவித்தனா்.

பிற்பகலில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வீடுகள், அலுவலகங்கள் பூட்டி இருந்தால் சீல் வைப்பதற்கு அதிகாரம் கிடையாது என்று அமலாக்கத் துறை ஒப்புக் கொண்டது. இதன் காரணமாக சீல் வைப்பதற்காக அளிக்கப்பட்ட நோட்டீஸை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கில் தீா்ப்பை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா். அமலாக்கத் துறை தரப்பில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஒப்படைக்கவும் உத்தரவிட்டனா்.