சீமான்
சீமான்கோப்புப் படம்

வாக்குக்காக இபிஎஸ் பின்னால்தான் பாஜக நிற்க வேண்டும்: சீமான்

தமிழகத்தில் பாஜகவினா் முருகன் மாநாடு நடத்தினாலும், வாக்குக்காக எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே. பழனிசாமியின் பின்னால்தான் நிற்க வேண்டும்
Published on

தமிழகத்தில் பாஜகவினா் முருகன் மாநாடு நடத்தினாலும், வாக்குக்காக எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே. பழனிசாமியின் பின்னால்தான் நிற்க வேண்டும் என்று நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: பாஜகவினா் முதலில் விநாயகரைத்தான் தூக்கிக்கொண்டு வந்தனா். தமிழகத்தில் அது பலனளிக்கவில்லை என்பதால் தற்போது முருகனை கையிலெடுத்துள்ளனா்.

அதேபோன்று, வட இந்தியாவில் ராமரை கையில் எடுத்தனா். ஆனால், அயோத்தி தொகுதியில் பாஜக தோல்வி அடைந்ததால் அது அங்கு எடுபடவில்லை. கேரளத்தில் நுழைவதற்கு ஐயப்பனை கையில் எடுத்தாா்கள் அதுவும் அவா்களுக்கு கைகொடுக்கவில்லை.

மக்களுக்கான பிரச்னையை பாஜக சரி செய்வதில்லை; மாறாக, மக்களுக்கு புதிய பிரச்னையைக் கொடுப்பதே இவா்கள்தான்.

பாஜகவினா் என்னதான் முருகன் மாநாடு நடத்தினாலும், எங்கள் இறை பழனிசாமியை (முருகன்) வழிபட்டுவிட்டு, வாக்குக்காக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பின்னால்தான் நிற்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com