
என்னுடன் இருப்பவர்களுக்கு தேர்தல் சீட் வழங்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தைலாபுரத்தில் பாமக நிர்வாகிகள் கூட்டம் கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாமக எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், எம்எல்ஏ அருளுக்கு பாமகவின் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுடன் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "இந்தக் கூட்டம் ஆக. 10-ல் நடைபெறவுள்ள பூம்புகார் மகளிர் மாநாடு குறித்து ஆலோசனை செய்வதற்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள், தலைவர்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்யவும் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சித் தொடங்கப்பட்ட காலம் முதல் இதுநாள் வரை கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறேன். 34 துணை அமைப்புகளையும் உருவாக்கி, வலிமையான அமைப்பாக உருவாக்கியுள்ளேன். இந்த கட்சியில் எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் எனக்குதான் உள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும் அணியுடன் பாமக கூட்டணி அமைக்கும். கூட்டணிக்கான முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். அதே நேரத்தில், தற்போது என்னால் கட்சியின் நிர்வாகிகளா அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு 2026 சட்டப்பேரவைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்" என்றார்.
பேட்டியின் போது, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு. தா. அருள், தலைமை நிலையச்செயலர் அன்பழகன், கட்சியின் எம்எல்ஏ அருள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிக்க: நீலகிரி, கோவையில் 2 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.