கூமாபட்டியிலிருந்து... விருதுநகர் முன்னாள், இந்நாள் மாவட்ட ஆட்சியர்கள் பதிவு!

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி கிராமம் பற்றி...
post on koomapatti, virudhunagar
ஜெயசீலன் ஐஏஎஸ் | சுகபுத்ரா ஐஏஎஸ்X
Published on
Updated on
2 min read

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பற்றி சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் ஒன்று வைரலான நிலையில் அதுபற்றி விருதுநகர் மாவட்ட முன்னாள், இந்நாள் மாவட்ட ஆட்சியர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

"தென் மாவட்டத்தில் கூமாபட்டி தனித்தீவு, ஊட்டி, கொடைக்கானல் போகத் தேவையில்லை, கூமாபட்டிக்கு வாங்க.." என கூமாபட்டி பற்றி இன்ஸ்டா பிரபலம் ஒருவர் பதிவிட்ட ரீல்ஸ் விடியோ இணையத்தில் வைரலானது. இதனால் பலரும் கூமாபட்டி நோக்கி படையெடுக்க, அந்த பகுதிக்கு வர வேண்டாம் என்று பொதுப்பணித்துறை நேற்று அறிவுறுத்தியது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சிறு கிராமம்தான் கூமாப்பட்டி. பிளவக்கல் பெரியார் அணை, கோயிலாறு அணை இருப்பதால் இப்பகுதி இயற்கை எழிலுடன் இருக்கிறது. ஆனால் மழைக்காலத்தில் மட்டும்தான். தற்போது தண்ணீர் இன்றி ஆறுகள் வறண்டு காணப்படுகிறது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் மாவட்ட ஆட்சியர்கள் இதுபற்றி தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமான முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்,

"உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து...

நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள் ‌!

எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு, பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்.. கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர். பிளவக்கல், கோவிலாறு அணைகளுக்கு அருகில், இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர்.

மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும். அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதைப் போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து ‌எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை.

தலைவனின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே‌! மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புர வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ள‌ இடம். எதிர்காலத்தில் இது‌ கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்!

கூமாபட்டி கண்மாயின் இன்றைய புகைப்படங்கள், கடைசி படம் கடந்த ஆண்டு நீர் நிரம்பியிருந்தபோது நான் எடுத்தது! மிகவும் ரம்மியமான பகுதி !!" என்று பதிவிட்டுள்ளார்.

ஜெயசீலன், தற்போது சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தின் தற்போதைய மாவட்ட ஆட்சியர் டாக்டர் சுகபுத்ரா,

"தமிழ்நாடு முதலமைச்சர் , விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவுக்கல் பெரியாறு அணையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Virudhunagar Former District Collector Jayaseelan and current district collector Dr Sukhaputra says about insta trending koomapatti village in virudhunagar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com