
திமுக எம்.பி.க்கள் பற்றி தவறாகப் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதனுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று(மார்ச் 10) தொடங்கியது.
இன்றைய கூட்டத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக திருக எம்.பி.க்கள் பேசினர். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்று திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பேசினர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'புதிய தேசிய கல்விக்கொள்கை பற்றிய சரியான புரிதல் தமிழ்நாட்டிற்கு இல்லை, பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர்வதாக தமிழ்நாடு கூறிய நிலையில் திடீரென நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தேசியக் கல்விக் கொள்கை திட்டத்தில் கையெழுத்திட தமிழ்நாடு முன்வந்தபோது சூப்பர் முதல்வர் அதனைத் தடுத்துவிட்டார். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு வஞ்சிக்கிறது' என்று பேசினார்.
அப்போது பேசுகையில் திமுக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று கூறினார். இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர்.மத்திய அமைச்சர் பேசியது வருத்தமளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.
இதையடுத்து தான் பேசியது புண்படுத்தியிருந்தால் அதனை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டை, தமிழக எம்.பி.க்களை அவமரியாதையாகப் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னையில் கொருக்குப்பேட்டை பகுதியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | திமுக எம்.பி.க்கள் பற்றி தவறான கருத்து: திரும்பப் பெற்றார் பிரதான்!
அதேபோல திருச்சி, சேலம், கோவையிலும் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை தர மறுக்கும் மற்றும் தமிழக எம்.பி.க்களை அவமரியாதையாகப் பேசிய தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும், மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும் திமுகவினர் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.