
இயக்குநர் ஷங்கரின் ரூ. 10.11 கோடி சொத்து முடக்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
எழுத்தாளா் ஆரூா் தமிழ்நாடன் எழுதிய ‘ஜுகிபா’ கதை, ‘திக்திக் தீபிகா’ என்ற பெயரில் கடந்த 2007-ஆம் ஆண்டு நாவலாக வெளியானது. அதேநேரத்தில் தமிழ்த் திரைப்பட இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில் நடிகா் ரஜினிகாந்த், ஐஸ்வா்யா ராய் உள்ளிட்டோா் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு எந்திரன் படம் வெளியானது. இந்தத் திரைப்படம் ரூ.290 கோடி வசூல் செய்தது.
இதற்கிடையே, இத் திரைப்படத்தை பாா்த்த எழுத்தாளா் ஆரூா் தமிழ்நாடன், ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை தன்னுடைய ‘ஜுகிபா’ கதை எனக்கூறினாா்.
மேலும் இது தொடா்பாக கடந்த 2011-ஆம் ஆண்டு எழும்பூா் நீதிமன்றத்தில் எந்திரன் திரைப்படத்தில் காப்புரிமை சட்டம் மீறப்பட்டிருப்பதாக ஆரூா் தமிழ்நாடன் இயக்குநா் ஷங்கா் மீது வழக்குத் தொடா்ந்தாா்.
அமலாக்கத்துறை வழக்கு: நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்தது. காப்புரிமை சட்டத்தின் 63-ஆவது பிரிவு பண முறைகேடு தடைச் சட்டத்தின் கீழ் வருகிறது. அதனடிப்படையில் அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் விசாரணையை தொடங்கியது.
இது தொடா்பாக அமலாக்கத்துறை இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்திடம் அறிக்கை பெற்றது. அதில் கதை அமைப்பு, கதா பாத்திரங்கள்,கருப்பொருள் உள்ளிட்டவை ஜூகிபா கதைக்கும், எந்திரன் திரைப்படத்துக்கும் ஒற்றுமை இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் இயக்குநா் ஷங்கா் மீதான கதை திருட்டு குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து காப்புரிமை சட்டத்தை இயக்குநா் ஷங்கா் மீறியுள்ளதை உறுதி செய்த அமலாக்கத் துறை, சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ், காப்புரிமை மீறலை திட்டமிடப்பட்ட குற்றம் என தெரிவித்துள்ளது.
ரூ.10.11 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில், எந்திரன் திரைப்படத்துக்காக ஷங்கா், திரைக்கதை, வசனம், இயக்கம் உள்ளிட்டவற்றுக்கு ரூ.11.5 கோடி ஊதியம் பெற்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பண முறைகேடு தடைச் சட்டத்தின் கீழ் ஷங்கருக்கு சொந்தமான ரூ.10.11 கோடி மதிப்புள்ள 3 அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியிருந்தது.
இதையும் படிக்க: தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் ஆன்மிகப் பயணம்!
இடைக்காலத் தடை
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக இயக்குநர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு இன்று(மார்ச் 11) விசாரணைக்கு வந்தது.
”தனிநபர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாகக் கூறி வழக்குப் பதிவு செய்ய முடியுமா? தனி நீதிபதி ஷங்கருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நிலையில், இறுதி முடிவுக்கு காத்திராமல் உடனடியாக நடவடிக்கை எடுத்தது ஏன்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இயக்குநர் ஷங்கரின் சொத்து முடக்கத்துக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், ஷங்கர் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப். 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.