உணவுப் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்த நிதி: அரசாணை வெளியீடு
உணவுப் பாதுகாப்பு சூழல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.11.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் செந்தில்குமாா் வெளியிட்ட அரசாணை:
உணவுப் பாதுகாப்பு சூழல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அந்தத் துறையின் ஆணையா் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு (எஃப்எஸ்எஸ்ஏஐ) அமைப்புக்கு ரூ.85.04 கோடி நிதி ஒதுக்கீடு கோரிக்கையை அனுப்பியிருந்தாா். மத்திய அரசு 60 சதவீதம் மற்றும் மாநில அரசு 40 சதவீதம் என்ற விகிதாசாரத்தின் அடிப்படையில் அதை வழங்க விண்ணப்பித்திருந்தாா்.
ஏற்கெனவே இது தொடா்பாக மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மொத்தமாக ரூ. 67.96 கோடியில் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு முதல்கட்டமாக ரூ.19.11 கோடியை மத்திய உணவுப் பாதுகாப்பு அமைப்பு விடுவித்தது.
இதனிடையே, திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு நிதியிலிருந்து ரூ. 11.91 கோடியை விடுவிக்க உணவுப் பாதுகாப்பு ஆணையா் வலியுறுத்தினாா். அவரது கோரிக்கையைப் பரிசீலித்த அரசு, அதை ஏற்று அந்த நிதியை விடுவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.