உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
Published on

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

உதகை, கொடைக்கானலுக்கு அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் வந்து செல்வதால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயா்நீதிமன்றம், தினமும் எத்தனை வாகனங்கள் வந்து செல்கின்றன என்பதைக் கண்டறிய, இ-பாஸ் வழங்கும் நடைமுறையை தொடங்க உத்தரவிட்டது. அதன்படி, இ-பாஸ் வழங்கும் முறை அமலில் உள்ளது. வாகன எண்ணிக்கை குறித்த தகவல்களை சேகரித்து சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎம் ஆகியவை ஆய்வு நடத்தி வருகின்றன. இது முடிய கால அவகாசம் தேவைப்படும் நிலையில், வரும் கோடை விடுமுறையின்போது, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாகனங்களை அனுமதிப்பது குறித்து பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மீண்டும் விசாரணை: இது தொடா்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமாா், பரத சக்கரவா்த்தி அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், சாதாரண மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடைக்கானலில் 50 இருக்கைகள் கொண்ட பேருந்துகளுக்கு ஆட்சியா் தடை விதித்துள்ளாா். வாகனங்களை அனுமதிப்பது தொடா்பாக ஐஐடி, ஐஐஎம் நடத்திவரும் ஆய்வு முடிய இன்னும் 9 மாதங்கள் அவகாசம் தேவைப்படும் எனக் கூறினாா்.

வாகனங்களுக்கு கட்டுப்பாடு: இதனைத் தொடா்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: உதகையில் வார நாள்களில் 6 ஆயிரம், வார இறுதி நாள்களில் 8 ஆயிரம், கொடைக்கானலில் வார நாள்களில் 4 ஆயிரம், வார இறுதி நாள்களில் 6 ஆயிரம் வாகனங்களை அனுமதிக்கலாம். இந்த கட்டுப்பாட்டிலிருந்து உள்ளூா் வாகனங்கள், விவசாய வாகனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். அரசுப் பேருந்து, ரயில் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

இந்த புதிய கட்டுப்பாடுகள் ஏப். 1 முதல் ஜூன் மாதம் வரை அமலில் இருக்க வேண்டும். இதனை அமல்படுத்தியது குறித்து ஏப். 25-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடா்பாக கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும். மின்சார வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும். மலை அடிவாரத்திலிருந்து நகரங்களுக்குச் செல்ல மினி மின்சாரப் பேருந்துகள் இயக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஏப். 25-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com