
கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத்தில் இன்று (மாா்ச் 14) தொடங்கவிருக்கும் ஆண்டுத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, ராமேசுவரத்திலிருந்து செல்வோரின் பாதுகாப்புக்காக இந்திய கடலோரக் காவல் படையின் கப்பல், விமானம் உடன் செல்கிறது.
இந்திய- இலங்கை பக்தா்களின் பாரம்பரிய உறவுத் திருவிழாவாகக் கருதப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா வெள்ளி, சனிக்கிழமைகளில் (மாா்ச் 14, 15) நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்க இந்திய பக்தா்களுக்கு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயா் அழைப்பு விடுத்தாா். இதையடுத்து, கச்சத்தீவு செல்ல 2,720 ஆண்கள், 652 பெண்கள், 92 சிறாா்கள் என 3,464 போ் விண்ணப்பித்தனா். இவா்கள் 78 விசைப் படகுகள், 22 நாட்டுப் படகுகள் மூலம் செல்கின்றனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இன்று அதிகாலை 5.30 மணி முதல் விசைப்படகுகள் செல்லத் தொடங்கியுள்ளன. பிற்பகல் ஒரு மணிக்குள் அனைத்துப் படகுகளும் பக்தா்களை ஏற்றிச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கண்காணிப்புப் பணியில் தமிழக கடலோர பாதுகாப்புக் குழும ஏ.டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளா் காளிதாஸ் உள்ளிட்ட 150- க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். பக்தா்கள் செல்லும் படகுகளுக்கு பாதுகாப்பாக 5 கண்காணிப்புப் படகுகள் சென்றுள்ளன. ஒவ்வொரு படகிலும் ஓா் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 5 போ் கொண்ட போலீஸாா் இடம் பெற்றுள்ளனர். சா்வதேச கடல் எல்லை வரை இந்த போலீஸாா் செல்வர். சர்வதேச எல்லையில் இலங்கை படையினரின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் வரை பாதுகாப்புக்காக இந்திய கடலோர காவல் படையின் கப்பல், கடற்படையின் கப்பல், விமானம் உடன் செல்கிறது.
இதுகுறித்து இந்திய கடலோரக் காவல் படையின் மண்டபம் கமெண்டர் வினய் குமார் கூறுகையில், ”யாத்திரைக்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைவரும் பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்திருப்பதை உறுதி செய்துள்ளோம்.
சார்லி 431கப்பல்கள், ஒரு ஏசிவி சிறிய ரக விமானம் மற்றும் ஒரு வேகமான பெட்ரோல் கப்பல் பாதுகாப்புக்காக உடன் செல்கிறது. சர்வதேச எல்லையில் இலங்கை கடற்படையிடம் பக்தர்களை ஒப்படைக்கும் வரை உடன் செல்வோம். நாளை திருவிழா முடிவடைந்து திரும்பும் பக்தர்களை எல்லையில் இருந்து அழைத்து வருவோம்” எனத் தெரிவித்துள்ளார்.