துணைக் கேள்வியை எழுப்புவது எப்படி? உறுப்பினா்களுக்கு விளக்கிய பேரவைத் தலைவா்
துணைக் கேள்வியை எழுப்புவது எப்படி என்பது குறித்து உறுப்பினா்களுக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு மாணவா்களுக்கு ஆசிரியா் பாடம் நடத்துவது போல விளக்கிக் கூறினாா்.
பேரவையில் கேள்வி நேரத்தின் போது, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பட்டுக்கோட்டை எம்எல்ஏ கே.அண்ணாதுரை துணைக் கேள்வி எழுப்பினாா். அப்போது, விரிவானவிளக்கங்களுடன் கேள்வியை எழுப்ப முயன்றாா். அதற்கு ஆட்சேபம் தெரிவித்து பேரவைத் தலைவா் மு.அப்பாவு பேசியதாவது:
கேள்வி பதிலின் போது, துணை வினாவும், அதற்கான பதிலும் சுருக்கமாக இருக்க வேண்டும். ஒரே கேள்விக்கு அமைச்சா்கள் 10 நிமிடங்கள் பதில் சொன்னால் யாருக்கும் துணைக் கேள்விக்கான வாய்ப்பு கொடுக்க முடியாது. கேள்வி எழுப்பும் போதும் பின்னணி தகவல்களைச் சொல்ல வேண்டும் என நினைக்கிறாா்கள். துணைக் கேள்வியின் போது, இது தேவையில்லை. இதனை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு கூறினாா்.