
தென்மாநிலங்கள் முழுவதும் 4 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை வீடுகள், வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்டுள்ளன.
ஒப்பந்த அடிப்படையில் நாடு முழுவதும் 24,000 டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒப்பந்தக் காலம் முடிவடையும் நிலையில், 2025 - 2030ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 17-ஆம் தேதி எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன், தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் சென்னையில் பேச்சு நடத்தினர்.
அதன்பிறகும் புதிய கட்டுப்பாடுகளில் பெரிய அளவில் தளர்வு அளிக்கப்படாததால், டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எண்ணெய் நிறுவனங்களின் தென்மண்டலத்துக்கு உள்பட்ட சென்னை, கொச்சி, பாலக்காடு, விசாகப்பட்டினம், மங்களூரு, எடியூர், சரளப்பள்ளி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள கிடங்குகளில் இருந்து எரிவாயுவை எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடும் 4,000 டேங்கர் லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றதால், போராட்டம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.