22 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணியை அக்டோபருக்குள் முடிக்க அமைச்சர் உத்தரவு!

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வுக்கூட்டம்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன்
அமைச்சர் தா.மோ.அன்பரசன்
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் அமைக்கப்பட்டு வரும் 22 புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்புக்கான திட்டங்களை வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அறிவிப்புகள் குறித்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், இன்று கிண்டியில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. 

கூட்டத்தில் பேசிய அமைச்சர்,

சிட்கோவைப் பொருத்தவரை இதுவரை ரூ. 364.93 கோடி மதிப்பில் 13 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ரூ.643.18 கோடி மதிப்பில் 22 தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்பேட்டைகளில் முதல் கட்டப் பணிகளை வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடித்து திறப்பு விழாவிற்கு கொண்டு வர வேண்டும்.

தொழில் வணிகத் துறை மற்றும் சிட்கோவினால் செயல்படுத்தப்படும் குறுங்குழும திட்டம் கிராமப்புற வேலை வாய்ப்பை உறுதி செய்யும் திட்டமாகும். அதில் ரூ. 44.14 கோடி மானியத்தில், ரூ. 54.08 கோடி திட்ட மதிப்பீட்டில் இதுவரை 11 குறுங்குழுமங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முந்திரி தொழில், அச்சுத் தொழில், புகைப்படத் தொழில், அச்சு வார்ப்பு, கயிறு, உப்பு, உணவு என பல்வேறு தொழில் புரிவோர் பயனடைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் ரூ.120.79 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் 22 குறுங்குழுமங்களுக்கான பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டினை கொண்டாடும் விதமாக தொடங்கப்பட்ட கலைஞர் கடன் உதவி திட்டத்தில் 30 நபர்களுக்கு தொழில் தொடங்க ரூ 4.47 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை மேலும் அதிகரிக்க வேண்டும். அதிக நபர்களுக்கு கடன் உதவி வழங்க வேண்டும்.  அதுபோல், கலைஞர் கைவினைத் திட்டத்திலும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் எய்தி, திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும். 

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையால் செயல்படுத்தப்படும் 5 வகையான சுய வேலைவாய்ப்பு திட்டங்களில் நடப்பு ஆண்டு ரூ. 635.17 கோடி மதிப்பில் 34,250 நபர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டு இறுதி வரை காத்திருக்காமல், 6 மாத காலத்திற்குள் இலக்கை அடைய வேண்டும். விண்ணப்பங்கள் மீது காலதாமதம் இன்றி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். விண்ணப்பங்கள் அதிகம் நிலுவையில் உள்ள மாவட்டங்களின் அலுவலர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். 

உலக முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் படி இதுவரை ரூ. 25,748 கோடி மதிப்பில் 2,373 நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள நிறுவனங்களை தொடங்க மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். 

ஆய்வுக் கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல் ஆனந்த், டான்சி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சிட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கார்த்திக் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com