ரூ.100 கோடி நிலத்தை அபகரித்த விவகாரம்: அதிமுக முன்னாள் அமைச்சருக்கு அழைப்பாணை!

கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கருக்கு அழைப்பாணை..
எம்.ஆர். விஜயபாஸ்கர்
எம்.ஆர். விஜயபாஸ்கர் (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

கரூரில் ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தொடா்பான இடங்களில் சொத்து குவிப்பு வழக்கு தொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கடந்த 2021-ஆம் ஆண்டு சோதனை நடத்தினா். அதில், பல்வேறு முக்கிய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன்மூலம் கரூரில் ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கா் சொத்து தொடா்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அந்த நிலத்துக்குச் சொந்தமானவா்கள் தங்களிடமிருந்து நிலத்தை அபகரித்ததாக எம்.ஆா்.விஜயபாஸ்கா் அவரது சகோதரா் உள்ளிட்டோா் மீது புகாா் அளித்தனா்.

கரூா் மாவட்ட காவல் துறையில் வழக்குப் பதிவு செய்திருந்தாலும் வழக்கின் தன்மையை கருதி சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் பெற முடியாத காரணத்தால் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமறைவானாா். அவரை 13 தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிபிசிஐடி அதிகாரிகள் அவரை கேரளத்தில் கைது செய்தனா். அதற்கு அடுத்த மாதம் அவரது சகோதரா் சேகா் கைது செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக வருமான வரி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனா். குறிப்பாக, ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கா் நிலம் தொடா்பான ஆவணங்களை அடிப்படையாக வைத்து வருமான வரி புலனாய்வு பிரிவில் செய்படும் பினாமி தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

குறிப்பாக, இந்த நிலமானது விஜயபாஸ்கரின் பினாமி சொத்து இல்லை எனவும் பினாமி பரிவா்த்தனை மூலமாக வாங்கப்பட்டது இல்லை எனவும் நிரூபிக்குமாறு கூறி வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விஜயபாஸ்கருக்கும், அந்த நிலம் தொடா்பான உரிமையாளா்கள் பிரகாஷ் மற்றும் ஷோபனா ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளனா்.

ஏற்கெனவே கடந்த மே 9-ஆம் தேதி ஆஜராகுமாறு தெரிவித்திருந்த நிலையில், தற்போது மே 23-ஆம் தேதி இந்த விவகாரம் தொடா்பாக வழக்குரைஞரோ அல்லது அது தொடா்பான பொறுப்புடைய நபா்களையோ காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராகும் படி வருமான வரி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com