
உதகையில் 127 ஆவது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(வியாழக்கிழமை) தொடக்கிவைத்தார்.
கோடைக்காலத்தில் நீலகிரியின் அழகினை கண்டு ரசிக்க வருகை தரும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தோட்டத் துறை சார்பில் பல்வேறு கண்காட்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் உதகையில் மலர்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127- ஆவது மலர்க் கண்காட்சியைத் தொடங்கிவைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்குள்ள மலர் அலங்காரங்களைப் பார்வையிட்டார். மேலும் மனைவி துர்காவுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
127- வது மலர்க் கண்காட்சியின் சிறப்பம்சமாக (Royal Theme) பண்டைய தமிழ் அரசர்களின் வாழ்வியல் முறைகளை வெளிக்காட்டும் வகையிலும் சிறுவர்களைக் கவரும் வகையிலும் இவ்வாண்டு 70 அடி நீளம், 20 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான அரண்மணை 1,30,000 மலர்களால் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 75 அடி நீளம், 25 அடி உயரத்தில் கார்னேசன், ரோஜா, சாமந்தி போன்ற 2 லட்சம் மலர்களைக் கொண்டு பண்டையக் கால அரண்மனை வடிவமைப்பு தத்ரூபமாக வண்ண மலர்களால் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் 8 அடி உயரம் கொண்ட 50 அன்னபட்சி, 400 சாமந்தி மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் 35 அடி அகலம் மற்றும் 40 அடி உயரமுள்ள மலர்களாலான கல்லணை 4,000 மலர் தொட்டிகள் மற்றும் 35 ஆயிரம் சாமந்தி மற்றும் ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பூங்காவின் பல்வேறு பகுதிகளில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பீரங்கி, யானை, சிம்மாசனம், ஊஞ்சல், இசைக்கருவிகள், புலி போன்ற வடிவமைப்புகள் பார்வையாளர்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மலர்க் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.