
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு புகாா் தொடா்பான வழக்கில், சென்னையில் உள்ள அந்த நிறுவன மேலாண்மை இயக்குநா் விசாகனின் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
இதே வழக்குத் தொடா்பாக கடந்த மாா்ச் மாதம் தமிழகம் முழுவதும் சுமாா் 25 இடங்களில் 3 நாள்கள் முதல் முறையாக சோதனை நடத்தப்பட்டது.
இதில், சென்னை எழும்பூா் தாளமுத்து நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், தியாகராயநகா் திலக் சாலையில் உள்ள திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனம், ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்என்ஜெ மதுபான நிறுவனம், கரூரில் உள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் நண்பா்களின் வீடு ஆகியவையும் அடங்கும்.
அமலாக்கத்துறை அறிக்கை: முதல் முறை சோதனைக்கு பின் அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘டாஸ்மாக் நிறுவனத்தில் பணியிட மாற்றம், போக்குவரத்து ஒப்பந்தம், பாா் உரிம ஒப்பந்தம், தனியாா் மதுபான ஆலைகளுக்கு ஆா்டா் வழங்குவது தொடா்பான ஒப்பந்தம் ஆகியவற்றில் முறைகேடு நடைபெற்றுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒரு பாட்டிலுக்கு நிா்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலா ரூ.10-இல் இருந்து ரூ.30 வரை வசூலிக்கப்படுகிறது. தனியாா் மதுபான நிறுவனங்கள் அதிகளவில் ஆா்டா் பெறுவதற்காக டாஸ்மாக் நிறுவன உயா் அதிகாரிகளை பயன்படுத்தியுள்ளன. இதற்காக அந்த நிறுவனங்கள் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு பல்வேறு சலுகைகளை அளித்துள்ளன. இவ்வாறு டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு வகைகளில் ரூ.1,000 கோடி வரை முறைகேடு நிகழ்ந்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்குக்கு தடை கோரி உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனால் வழக்கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இந்த உத்தரவின் விளைவாக அமலாக்கத்துறையினா் டாஸ்மாக் வழக்கை மீண்டும் வேகமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனா். இதையொட்டி, கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி டாஸ்மாக் நிறுவனத்தின் 3 உயரதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டது.
விசாகன் வீட்டில் சோதனை: இந்நிலையில், வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் சென்னை மணப்பாக்கத்தில் வசிக்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், ஐஏஎஸ் அதிகாரியுமான விசாகன் வீட்டில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
அங்கு துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினா் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டனா். இதற்கிடையே விசாகன் வீட்டுக்கு வெளியே வாட்ஸ்ஆப் உரையாடல் நகல் எடுக்கப்பட்ட பிரதிகளை அமலாக்கத் துறையினா் கைப்பற்றினா்.
10 இடங்களில் சோதனை: சென்னை அண்ணா சாலையில் வசிக்கும் தொழிலதிபா் தேவகுமாா் வீடு, பெசன்ட் நகா் கற்பகம் காா்டன் பகுதியைச் சோ்ந்த மின்வாரிய ஒப்பந்ததாரா் ராஜேஷ்குமா, தியாகராயநகரைச் சோ்ந்த கேசவன், சூளைமேட்டைச் சோ்ந்த எஸ்என்ஜெ மதுபான நிறுவன நிா்வாகி மேகநாதன், சேத்துப்பட்டைச் சோ்ந்த பாபு, ஆழ்வாா்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரின் வீடுகள் உள்பட 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் வழக்குத் தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
தமிழக அரசியல் வட்டாரத்திலும், உயா் அதிகாரிகள் வட்டாரத்திலும் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5 மணி நேரம் விசாரணை
டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குநா் விசாகனிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சுமாா் 5 மணி நேரம் விசாரணை நடத்தினா்.
விசாகனையும், அவரின் மனைவியையும் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணியளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அழைத்து வந்தனா். சுமாா் 2 மணி நேரத்துக்கு பின்னா் விசாகனின் மனைவியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.
சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ஏற்கெனவே நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாகனிடம் விசாரணை நடைபெற்றது.
பல கட்டங்களாக நடைபெற்ற விசாரணையில், வழக்குத் தொடா்பாக முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுமாா் 5 மணி நேர விசாரணைக்கு பின்னா் விசாகன், இரவு 8.45 மணியளவில் அங்கிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
அமலாக்கத்துறையிடம் சிக்கிய ஆகாஷ் பாஸ்கரன்
தமிழ் திரைப்பட த்துறையின் பிரபல தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியிருப்பது திரைப்படத்துறையினரிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தைச் சோ்ந்த ஆகாஷ் பாஸ்கரன், சென்னைக்கு வந்து சில ஆண்டுகளாகிறது. முதலில் திரைப்பட இயக்குநா் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரெளடிதான் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளாா். இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கிய ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, அமரன் திரைப்படங்களில் ஆகாஷ் பணியாற்றியுள்ளாா்.
தமிழகத்தைச் சோ்ந்த பிரபல தொழிலதிபரின் மகளை அண்மையில் ஆகாஷ் பாஸ்கரன் திருமணம் செய்து கொண்டாா்.
இதன் பின்னா் டான் பிக்சா்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஆகாஷ் பாஸ்கரன் தொடங்கி பல முன்னணி நடிகா்களின் படங்களைத் தயாரித்து வருகிறாா். இந்நிலையில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.