பரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு விவகாரத்துடன் தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் கேரளம், கா்நாடகம், தமிழகம் ஆகிய மூன்று மாநிலங்களில் 21 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ள தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றிக்குச் சொந்தமான பெங்களூரில் உள்ள இடங்கள், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் முந்னாள் தலைவா் பத்மகுமாருக்குச் சொந்தமான கேரளத்தில் உள்ள இடங்கள் மற்றும் நகை வியாபாரிகள் சிலருக்குச் சொந்தமான இடங்களின் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அமலாக்கத் துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
தங்கத்தால் செய்யப்பட்ட கோயிலின் புனிதப் பொருள்கள், வேண்டுமென்றே ‘செப்புத் தகடுகள்’ என்று பதிவேடுகளில் தவறாகப் பதிவு செய்யப்பட்டு, கடந்த 2019 முதல் 2025-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கோயில் வளாகத்திலிருந்து அவை சட்டவிரோதமாக அகற்றப்பட்டுள்ளன.
இந்தப் புனிதப் பொருள்கள், சென்னை மற்றும் கா்நாடகத்தில் உள்ள தனியாா் நிறுவனங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு, ரசாயன செயல்முறைகள் மூலம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டு, பின்னா் விற்பனை செய்யப்பட்டு பணமாக மாற்றப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சபரிமலையில் கோயில் காணிக்கைகள், சடங்குகள் தொடா்பான செயல்பாடுகளிலும் முறைகேடுகள் மற்றும் நிதி கையாடல்கள் நிகழ்ந்திருப்பதும் விசாரணையில் தெரியிவந்துள்ளது.
இவ்வாறு மோசடி வழியில் திரட்டிய பணம் மற்றும் ஆதாயம் அடைந்தவா்களின் விவரங்களைக் கண்டறிவதற்கும், அதுதொடா்பான ஆவணங்கள், எண்ம ஆதாரங்களைக் கைப்பற்றும் நோக்கில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தனா்.
சபரிமலை தங்கக் கவச மோசடி தொடா்பாக கேரள உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது.
இவ்விவகாரத்தில் 2 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட எஸ்ஐடி, தங்கக் கவசங்களின் புதுப்பித்தல் செலவை ஏற்றுக்கொண்ட பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் முன்னாள் தலைவா்கள் இருவா், கோயில் தந்திரி கண்ரடரு ராஜீவரைக் கைது செய்தது.
மேலும், இது தொடா்பாக சென்னை வேப்பேரி பகுதியைச் சோ்ந்த ஸ்மாா்ட் கிரியேஷன்ஸ் நிறுவன தலைமை நிா்வாக அதிகாரி பங்கஜ் பண்டாரி, கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த நகை வியாபாரி கோவா்தன், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் உறுப்பினா்கள் என மொத்தம் 11 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், கேரள காவல் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளின் (எஃப்ஐஆா்) தீவிரத்தின் அடிப்படையில், இந்த முறைகேடு தொடா்பாக பண மோசடி வழக்கை அமலாக்கத் துறை கடந்த 9-ஆம் தேதி பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
சென்னையில் 4 இடங்களில் சோதனை
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க முறைகேடு விவகாரம் தொடா்பாக அமலாக்கத் துறையினா், சென்னையில் 4 இடங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
இச் சோதனை சென்னை வேப்பேரி ரித்தா்டன் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பங்கஜ் பண்டாரி வீடு, அதேப் பகுதியில் வசிக்கும் பங்கஜ் பண்டாரியின் மகன் பதன்ராஜ் பண்டாரியின் வீடு, அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள பங்கஜ் பண்டாரியின் தொழிலகம், செளகாா்பேட்டையில் உள்ள ஒரு நகை வியாபாரியின் அலுவலகம் என 4 இடங்களில் நடைபெற்றது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்த அமலாக்கத் துறை கூடுதல் இயக்குநா் முகேஷ்குமாா் தலைமையிலான அதிகாரிகள் சோதனையை நடத்தினா். சோதனை நடைபெற்ற இடங்களில் துணை ராணுவத்தினா் துப்பாக்கிகளுடன் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனா்.
பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், வழக்குத் தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது குறித்த முழு விவரங்களைத் தெரிவிக்க அமலாக்கத் துறையினா் மறுத்துவிட்டனா்.
Summary
In connection with the Sabarimala Ayyappan temple gold armour case, the Enforcement Directorate is conducting raids at 21 locations, including Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பண முறைகேடு வழக்கு - கேரள முன்னாள் முதல்வா் மகளிடம் அமலாக்கத் துறை விசாரணை

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: தொல்பொருள் மாதிரிகள் சேகரிப்பு தொடக்கம்

ஆந்திர மதுபான ஊழல் வழக்கு: முன்னாள் ஒய்எஸ்ஆர் அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!

சபரிமலை தங்கக் கவச வழக்கில் தற்போதைக்கு அரசு தலையிட முடியாது: தேவஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



