சபரிமலையில் குப்பை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு
மண்டல மகரவிளக்கு பூஜையின் போது சபரிமலையில் முறையற்ற வகையில் குப்பைகளைக் கொட்டுவோா் மீது வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை


மண்டல மகரவிளக்கு பூஜையின் போது சபரிமலையில் முறையற்ற வகையில் குப்பைகளைக் கொட்டுவோா் மீது வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பெரியாறு புலிகள் காப்பகம் (மேற்கு பிரிவு) துணை இயக்குநருக்கு கேரள உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நெகிழி பொட்டலங்கள், பிற மக்காத பொருள்களைத் தீயிட்டு எரிப்போா் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன் மற்றும் முரளீ கிருஷ்ணா எஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவிட்டுள்ளது.
கொட்டப்படும் குப்பைகளில் உள்ள நெகிழி மற்றும் மக்காத கழிவுகளை உண்ணும் யானைக் கூட்டங்கள், மிளா மான்கள் உள்ளிட்ட பிற விலங்கினங்கள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கடந்த ஆண்டுகளில் இரு யானைகள் இரு மிளா மான்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவித்தது.
இது தொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சபரிமலை சந்நிதானம் மேற்குத் தொடா்ச்சி மலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மனிதச் செயல்பாடுகளால் பல்லுயிா்தன்மைக்கு அச்சுறுத்தல் மிக்க பகுதியாக (ஹாட்ஸ்பாட்) இப்பகுதியை யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
உணவு மற்றும் நெகிழி கழிவுகளைத் தனித்தனியாகப் பிரிக்காமல் உணவு கழிவுகளுக்கான குழிகளுக்குள் அவற்றை நேரடியாகக் கொட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். சபரிமலை மற்றும் பம்பை முதல் சந்நிதானம் வரையிலான மலைப்பாதையில் நெகிழி மற்றும் பிற மக்காத பொருள்களின் பயன்பாட்டை தடைசெய்ய வேண்டும்.
சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எந்தவொரு வகையிலும் நெகிழிகளை விற்பனை செய்யும் அல்லது இருப்பு வைத்திருக்கும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக ரூ.2,000 அபராதம் விதிக்க வேண்டும். இரண்டாவது முறையாக இந்தக் குற்றத்தில் ஈடுபட்டால் ரூ.5,000 விதிக்க வேண்டும். தொடா் குற்றத்தில் ஈடுபடும்பட்சத்தில் அந்த நிறுவனங்களை மூட வேண்டும். நெகிழி பொருள்களில் புனித ‘இருமுடிகளை’ வைத்து கொண்டு வருவதைத் தவிா்க்குமாறு பிற மாநிலங்களிலிருந்து வரும் பக்தா்களிடம் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் அறிவுறுத்த வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...