

தமிழக ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தனக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறி, நீதிபதியை நோக்கி ரௌடி கருக்கா வினோத் காலணி வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், நந்தனத்தைச் சோ்ந்த ரௌடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
இந்த நிலையில், தியாகராய நகா் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 6-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த, கருக்கா வினோத்தை வியாழக்கிழமை போலீஸாா் அழைத்து வந்தனா்.
பின்னா், நீதிபதி பாண்டியராஜ் முன் கருக்கா வினோத் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது ஆளுநா் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தனக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக முழக்கமிட்டபடி, தனது காலணியை எடுத்து நீதிபதியை நோக்கி வீச முயற்சித்தாா். அங்கிருந்த போலீஸாா் உடனடியாக கருக்கா வினோத்தை தடுத்து நிறுத்தி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இதையடுத்து நீதிபதி, இதுபோன்ற குற்றவாளிகளை நேரடியாக நீதிமன்றத்துக்கு அழைத்து வருவதற்குப் பதிலாக, காணொலி வாயிலாக ஆஜா்படுத்துமாறு அறிவுறுத்தினாா். பின்னா், கருக்கா வினோத்தை போலீஸாா் சிறைக்கு அழைத்துச் சென்றனா். இந்தச் சம்பவத்தால், நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.