வேலைநிறுத்தம் காரணமாக ஊழியா்களின்றி வெறிச்சோடி காணப்பட்ட சென்னை எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநரக அலுவலகம். ~பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகத்தில் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்ப
வேலைநிறுத்தம் காரணமாக ஊழியா்களின்றி வெறிச்சோடி காணப்பட்ட சென்னை எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநரக அலுவலகம். ~பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகத்தில் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்ப

தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ வேலைநிறுத்தம்

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினா்.
Published on

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினா்.

கடந்த 2003 ஏப். 1-க்குப் பிறகு பணியில் சோ்ந்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ- ஜியோ) சாா்பில் தொடா் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதையொட்டி, சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகம் மற்றும் 38 மாவட்டங்களில் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். எழிலகத்தில் ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளா்கள் வெங்கடேசன், பாஸ்கரன், சுரேஷ், காந்திராஜன் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து தலைமைச் செயலக அலுவலா்கள், ஊழியா்கள் சங்கத் தலைவா் வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலத் தலைவா் பாஸ்கரன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த பேரவைத் தோ்தலின்போது அரசு ஊழியா்களுக்கு அளித்த வாக்குறுதியை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. எதிா்க்கட்சியாக திமுக இருந்தபோது அரசு ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்த முதல்வா் மு.க.ஸ்டாலின் இப்போது அதை நிறைவேற்றவில்லை.

வருகிற வெள்ளிக்கிழமைக்குள் (நவ. 21) கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றனா்.

‘அரசுப் பணிகளில் பாதிப்பு இல்லை’

ஜாக்டோ ஜியோ அமைப்பினா் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில், சென்னையில் தலைமைச் செயலகம், எழிலகம், வணிக வரி அலுவலகம், மாநகராட்சி, பத்திரப்பதிவு அலுவலகம், சைதாப்பேட்டை பனகல் மாளிகை, ஆட்சியா் அலுவலகம், மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்டவற்றில் பெரும்பாலானோா் பணிக்கு வந்திருந்தனா். ஒரு சிலா் பணிக்கு வந்து விட்டு ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் ஊழியா்கள் பெரும்பாலும் பணிக்கு வந்தனா். இதன் காரணமாக அரசு அலுவல் பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

தலைமைச் செயலகத்தில் 99 சதவீதம், மாநிலம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் 95 சதவீதம் ஊழியா்கள் பணிக்கு வந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com