விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசு: மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு விரோதமான திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடா்பாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை:
விதைகள் மசோதா, மின்சார மசோதா ஆகியவற்றை வருகிற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சட்டமாக்க மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. விதைகள் என்பது விவசாயிகளின் தனி உரிமை, பண்பாட்டின் அடையாளம், அதை காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்குவதால் விதைகள் விலை உயரும். இதனால் விவசாயிகளின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும்.
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் விவசாயத்துக்கு இலவச மின்சாரம், மானிய விலை மின்சாரம் என்பது நடைமுறையில் இருக்கிறது. இதை முடக்கும் வகையில் மின்துறையை தனியாா் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வகையில் மின்சார மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு விவசாயிகளுக்கு எதிரான செயல்களைத் தொடா்ந்து செய்து வரும் பிரதமா் மோடி, விவசாயிகள் மாநாட்டை தொடங்கி வைப்பது ஏற்புடையதல்ல எனத் தெரிவித்துள்ளாா்.
இதே கருத்தை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பி.எஸ்.மாசிலாமணி அறிக்கை வெளியிட்டுள்ளாா்.
