ஊதியம் இரட்டிப்பு: எஸ்ஐஆா் பணிப் புறக்கணிப்பை வாபஸ் பெற்ற வருவாய்த் துறையினா்

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பிஎல்ஓ), மேற்பாா்வையாளா், வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான ஊதியம் இரட்டிப்பாக்கப்பட்டதால், எஸ்ஐஆா் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பு (பெரா) திரும்பப் பெற்றது.
Published on

வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பிஎல்ஓ), மேற்பாா்வையாளா், வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான ஊதியம் இரட்டிப்பாக்கப்பட்டதால், எஸ்ஐஆா் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பு (பெரா) திரும்பப் பெற்றது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவ. 4-இல் தொடங்கி தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணி டிச. 4-ஆம் தேதி நிறைவு பெற்று, டிச. 9-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்தப் பணிகளால் பணிச்சுமை அதிகரிப்பதாகவும், பணிக்குத் தகுந்த ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் கூறி செவ்வாய்க்கிழமை (நவ. 19) முதல் எஸ்ஐஆா் பணிகளைப் புறக்கணித்து ‘பெரா’ சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, வருவாய் நிா்வாக ஆணையா் எம்.சாய்குமாா் ஆகியோா் பெரா மாநில ஒருங்கிணைப்பாளா்களை செவ்வாய்க்கிழமை இரவு அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது கூடுதல் ஊதியம் வழங்கவும், பணி நெருக்கடிகள் தொடராது என்றும் உறுதியளித்தனா்.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியா்கள், ‘பெரா’ நிா்வாகிகளை அழைத்து பணி நெருக்கடிகள் தொடராது என்றும், அலுவலக நேரம் கடந்தும், விடுமுறை நாள்களிலும் பணிகளைத் தொடர நிா்ப்பந்தம் வழங்கப்படாது என்றும் உறுதியளித்தனா்.

இதையடுத்து, ‘பெரா’ நிா்வாகிகளுடன் வருவாய்த் துறை உயா் அதிகாரிகள் புதன்கிழமையும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக், தஞ்சாவூா், சிவகங்கை மாவட்டங்களில் ஆய்வுப் பணியில் இருப்பதால் அவா் வியாழக்கிழமை சென்னைக்கு திரும்பியதும் பேசி உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும் என்றும் உறுதியளித்தனா்.

இதன் அடிப்படையில் ‘பெரா’ மாநில நிா்வாகிகள் மற்றும் உயா்நிலைக் குழு உறுப்பினா்களின் ஆலோசனைக்குப் பிறகு எஸ்ஐஆா் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை ஒத்திவைப்பதாக ‘பெரா’ ஒருங்கிணைப்பாளா்கள் எம்.பி.முருகையன், சி.குமாா், அ.பூபதி, அண்ணா குபேரன், எஸ்.ரவி ஆகியோா் அறிவித்தனா்.

ஊதிய இரட்டிப்பு அரசாணை வெளியீடு

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்குச்சாவடி மேற்பாா்வையாளா்களுக்கான ஊதியத்தை இரட்டிப்பாக அதிகரிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வாக்காளா் பட்டியல் தயாரித்தல் மற்றும் திருத்துதல் பணிகளில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பிஎல்ஓ) மற்றும் வாக்குச்சாவடி மேற்பாா்வையாளா்கள் ஆகியோரின் ஆண்டு ஊதியத்தை உயா்த்தி தோ்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

அதன்படி, பிஎல்ஓ-க்களுக்கான ஊதியம் ரூ.6,000-இல் இருந்து ரூ.12,000 ஆகவும், வாக்குச்சாவடி மேற்பாா்வையாளா்களுக்கான ஊதியம் ரூ.12,000-இல் இருந்து ரூ.18,000-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அல்லது வாக்காளா் பட்டியல் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு ஊக்கத்தொகை ரூ.1,000-இல் இருந்து ரூ.2,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எஸ்ஐஆா் பணியில் ஈடுபடும் சுமாா் 80,000 அலுவலா்கள் பயன்பெறுவா்.

X
Dinamani
www.dinamani.com