

தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூண், விநாயகர் கோயில் அருகே அமைந்துள்ள மண்டபம், நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும். கார்த்திகை மாதத்தில் தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். மலை மேல் அமைந்துள்ள விநாயகர் கோயில் அருகே உள்ள மண்டபத்தின் மேல் இரண்டரை அடி அகலம், மூன்றரை அடி உயரமுள்ள தாமிர கொப்பரையில் 300 லிட்டர் நெய், 150 மீட்டர் காடாத் துணி, 5 கிலோ கற்பூரத்தால் மகா தீபம் ஏற்றப்படும்.
இந்த நிலையில், கோயில் சார்பில் ஏற்றப்படும் கார்த்திகை மகா தீபத்தை மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் எழுமலையைச் சேர்ந்த ராமரவிக்குமார் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு திருப்பரங்குன்றம் வந்தார். பிறகு, அவர் பழைய படிக்கட்டுப் பாதை வழியாக மலைக்கு சென்றார்.
தற்போது கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் விநாயகர் கோயில் அருகே உள்ள மண்டபம், நெல்லித்தோப்பு, மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூண் ஆகியவற்றை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவர் புதிய படிக்கட்டு பாதை வழியாக இரவு 7.15 மணிக்கு கீழே இறங்கினார். அவருடன் கோயில் துணை ஆணையர் யக்ஞ நாராயணன் சென்றிருந்தார். காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன், உதவி ஆணையர் சசிப்பிரியா, காவல் ஆய்வாளர்கள் மதுரை வீரன், ராஜதுரை உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்ட போலீஸார் மலைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.