

தமிழகம் முழுவதும் பருவ கால காய்ச்சல் மற்றும் சுவாசப் பாதை தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், இணை நோயாளிகள் எளிதில் அத்தகைய பாதிப்புக்குள்ளாவதாகவும், இதைத் தவிர்க்க முகக் கவசம், தடுப்பூசி அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக பொது நல மருத்துவ நிபுணர் அ.ப.ஃபரூக் அப்துல்லா கூறியதாவது: ஆர்எஸ்வி எனப்படும் சுவாசப் பாதை தொற்று மற்றும் இன்ஃப்ளூயன்ஸா சார்ந்த பிரச்னைகளின் தாக்கம் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்களுக்கு அதிகமாக உள்ளது.
மூச்சுத் திணறல், காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. தேவைப்பட்டால் எக்ஸ்}ரே, சளி பரிசோதனை, ரத்தப் பரிசோதனை மேற்கொண்டு நிமோனியா அல்லது வேறு பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்டறிவது அவசியம்.
சுவாசப்பாதையை விரிவடையச் செய்யும் மருந்துகள், இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் ஆகியவற்றை மருத்துவரின் பரிந்துரையின்பேரில் உட்கொள்ளலாம். முதியவர்கள், இணைநோயாளிகள், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக் கவசம் அணிதல் அவசியம் என்றார் அவர்.
குழந்தைகள் பாதிப்பு: இதனிடையே, குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் வில்வநாதன் கூறியதாவது:
பொதுவாகவே பருவ நிலை மாற்றமைடயும்போது காய்ச்சல், சளி, தொண்டை வலி, நுரையீரல் பாதிப்பை உருவாக்கக் கூடிய தொற்றுகள் அதிகரிப்பது இயல்பு. அந்த வகையில், நிகழாண்டிலும் கடந்த சில வாரங்களாக ஆர்எஸ்வி, இன்ஃப்ளூயன்ஸô காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
இன்னொருபுறம் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான குழந்தைகளும் மருத்துவமனைக்கு வருகின்றனர். ஒரு சில இடங்களில் சால்மோனெல்லா டை"ஃ"பி பாக்டீரியா மூலம் உருவாகும் டைபாய்டு காய்ச்சலும் பரவி வருகிறது.
இத்தகைய பாதிப்புகளைத் தவிர்க்க காய்ச்சிய நீரையே பருக வேண்டும். கொசுக்கள் கடிக்காதவாறு முழுமையாக மூடிய ஆடைகளை அணிதல் அவசியம். தரமற்ற உணவுகளைத் தவிர்த்தல் அவசியம். குழந்தைகளுக்கான தடுப்பூசி தவணைகளை தவறவிடக் கூடாது. கூட்டமான இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.