
அதிமுகவை திருட்டுக்கடை போல எல்லோரிடமும் கைப்பற்றியவர் எடப்பாடி பழனிசாமி என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (அக். 17) சென்னை, தலைமைச் செயலகம், பிரதான கட்டடம், நான்காவது நுழைவாயில் அருகில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
எதிர்க்கட்சித் தலைவர் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து ஒரு பேட்டி அளித்திருக்கிறார்.
அவருடைய நிலைமை இவ்வளவு மோசமாக போகும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாத நிலைக்கு சென்றுவிட்டார். சட்டமன்றத்தில் பேச வேண்டியவர்; மக்கள் மன்றத்தில் பேச வேண்டியவர்; சட்டமன்ற அரசியல் - மக்கள் மன்ற அரசியலைத் தாண்டி தற்போது கடைசியாக இன்ஸ்டாகிராம் - ரீல்ஸ்க்கும் அரசியல் செய்ய வேண்டிய சூழலில் தள்ளப்பட்டுவிட்டார் என்பதுதான் பாவமாக இருக்கிறது. ஒரு அல்வா பாக்கெட்டை வைத்துக்கொண்டு உருட்டுக்கடை அல்வா என்றெல்லாம் கதை விட்டிருக்கிறார். அவர்தான் இன்று திருட்டுக்கடை பழனிசாமியாக இருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு எப்படி இவர் கைக்கு வந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த அதிமுக என்ற கம்பெனியை சசிகலாவிடமிருந்து லீசுக்கு எடுத்து நடத்த ஆரம்பித்தவர் பாஜகவுடன் சேர்ந்து கொண்டு சசிகலாவை சிறைக்கு அனுப்பிவிட்டு திருட்டு கடையைக் கைப்பற்றினார்.
அதற்குப் பிறகு டிடிவி தினகரனை ஏமாற்றினார். அவரிடம் இருந்து கைப்பற்றினார். அதற்கு பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் ஒரு கூட்டணி வைத்துக்கொண்டு நீ பாதி நான் பாதி கண்ணே... என்று ஒரு பார்ட்னர்ஷிப் ஆரம்பித்து ஐந்து வருடம் கழித்தார். அதற்கு பிறகு அவரையும் ஏமாற்றினார். அவரிடம் இருந்தும் தட்டி தூக்கினார்.
இதெல்லாம் முடிந்தது. எதிர்க்கட்சியானார். ஒரு ஐவர் அணியை உடன் வைத்துக்கொண்டு சுற்றினார். அதற்கு பிறகு இருவரணி ஆகிவிட்டது. அந்த ஐவரணியையும் ஏமாற்றி திருட்டு கடையை வேலுமணி, தங்கமணி என்ற இருவரை மட்டுமே தன் உடன் வைத்துக்கொண்டு இருவர் அணியாக வைத்துக் கொண்டிருந்தார். தற்போது கடைசியாக தில்லிக்கு சென்ற பிறகு என்ன ஆனார்? அந்த இருவர் அணியையும் கழற்றிவிட்டு தன்னுடைய திருமகன் மிதுன் பழனிசாமியை மட்டும் வைத்துக்கொண்டு இன்றைக்கு அவர் செல்கிறார். இப்படி அதிமுகவை ஒரு திருட்டுக்கடை போல எல்லோரிடமும் கைப்பற்றி இருக்கின்றவர் - திமுகவை பார்த்து உருட்டுக்கடை என்று சொல்வது எவ்வளவு வேதனையாக இருக்கிறது.
திமுக என்ன செய்திருக்கிறது? என்று - மகளிர் உரிமைத் தொகை பெறும் ஒரு கோடியே 15 இலட்சம் பேரிடம் சென்று கேட்டுப்பார்க்கட்டும். உண்மையாக அந்த திட்டம் நடைபெறுகிறதா? உருட்டா? என்று…
புதுமைப் பெண் திட்டத்தில் கல்லூரியில் தமிழகத்தில் பெண் குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களிடம் சென்று கேட்கட்டும் இது உருட்டா? உண்மையா? என்று...
தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு மாணவர்கள் கல்லூரியில் படிக்கிறார்கள். அவர்களைச் சென்று கேட்கட்டும் உருட்டா? உண்மையா? என்று...
காலை உணவு திட்டம் - பயிலும் பிள்ளைகளிடம் சென்று கேட்கட்டும். இப்படி நடக்கின்ற திட்டங்களை எல்லாம் மறைத்துவிட்டு நீட் ஏன் ரத்தாகவில்லை? கல்வி கடன் ஏன் ரத்தாகவில்லை? என்று கேட்கிறார். இதெல்லாம் மத்திய அரசின் அதிகாரத்தில் வருவது என்பது அவருக்கு தெரியும்.
தெரியவில்லை என்றால், அவர் ஏன் முதலமைச்சராக இருக்கிறார் என்ற கேள்வியே வரும். எதையெல்லாம் உண்மையோ அதையெல்லாம் மறைத்துவிட்டு எதையெல்லாம் கதை கட்டலாமோ அதையெல்லாம் வைத்துக் கொண்டு கதை விடுகிறார்.
இவருக்கு என்ன உருட்டுகடை என்றால், இவர்கள் கொடுத்த வாக்குறுதி பெண்களுக்கு செல்போன் கொடுப்போம் என்று கூறியது - இரு சக்கர வாகனம் கொடுப்போம் என்று கூறியது - இதுபோன்று பெரிய பட்டியல் இருக்கிறது. இவர்கள் உருட்டிய உருட்டு” என்றார்.
இதையும் படிக்க: விண்ணைமுட்டும் விமான டிக்கெட் விலை! பயணிகள் அதிர்ச்சி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.